ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் பொதுமக்கள் அவதி! சிபிஐ(எம்) கண்டனம்

அனைவருக்கும் சுலபமான முறையில் விரைவில் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கடந்த 8-11-2016 அன்று இரவு பிரதமர் மோடி அவர்கள் ரூ.,500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை ஒட்டி சாதாரண மக்கள், வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக்கடுமையான சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

“அரசின் இந்த நடவடிக்கையானது கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்த எந்த உருப்படியான காரியத்தையும் செய்யப் போவதில்லை; இது வெறும் அரசியல் சாசகம் மட்டுமே; இது கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் தில்லுமுல்லுகள் எதையும் தொடப்போவதில்லை; கருப்புபப்பணத்தின் ஊற்றுக்கண்ணை அடைக்காமல் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை” – போன்ற விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, அரசு தொல்லைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவி செய்ய எந்த முன்முயற்சியும் செய்யாமலிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

 • தானியங்கி பணம் விநியோகிக்கும் எந்திரம் (ATM) 11-11-2016 முதல் செயல்படும் எனச் சொல்லப்பட்டது முழுமையாக நடக்கவில்லை.
 • வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக கியூவரிசையில் மக்கள் சாரை சாரையாக மணிக் கணக்காகக் காத்திருக்கின்ற அவலம் குறையவில்லை.
 • கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் ரூ.10000த்துக்கு மேல் எடுக்க முடியாது எனக்கூறுவது மாபெரும் தவறு. திருமணம், மருத்துவம் உட்பட பல உயர்தொகை செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
 • புதிய ரூ.500/ரூ.2000 நோட்டுகள் தேவையான அளவுக்கு வழங்காத காரணத்தால் வங்கிகள் தன்னிச்சையாக 10000த்துக்குப் பதிலாக ரூ.2000/- அல்லது ரூ.3000/- மட்டுமே வழங்குகிறார்கள்.
 • பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் வர்த்தக நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நின்று போய் விட்டது. .
 • கருப்புப்பணம் வைத்திருபபவர்களை விட்டு விட்டு அப்பாவி மக்களைத் துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

உடனடியாக,

 • வங்கிகளில் அவரவர் கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண் டும்.
 • ஏஎடிஎம்-கள் மூலம் பணம் போட/எடுக்க ஆகிய அன்றாட நடவடிக்கைக்குப் பழகிவிட்ட மக்கள் இன்று ஏஎடிஎம்கள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, ஏடிஎம்கள் முன்பு போல செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
 • வர்த்தக நிமித்தகமாக வர்த்தகர்கள்/ வியாபாரிகள் அன்றைய வியாபாரம்/ கொள்முதல் தேவை அளவு பணம் எடுத்துக் கொள்ள உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
 • பழைய நோட்டுகளை மாற்ற எந்த அடையாள அட்டையையும் அனுமதிக்க வேண்டும். ஆதார் அட்டைதான் கண்டிப்பாக வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
 • பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு சிறப்பு கவுண்டர்களை அனைத்து மத்திய அரசு சார்ந்த அலுவலகங்களிலும் நிறுவ வேண்டும்.
 • உயர்மட்டப் பணத்தேவை உள்ளவர்களுக்கு (திருமணம் முதலிய செலவுகள்) தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக முழுப்பணத்தையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • புதிய ரூ.500/ரூ.2000 நோட்டுகள் தேவையான அளவில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

உடனடியாக அரசு தலையிட்டு இதுபோன்ற உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...