ரெம்டேசிவிர்: கண்டுபிடிப்புஏகபோகத்தை உடைத்திடு!கட்டாய உரிமம் வழங்கிடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்காக வெளிவந்துள்ள ராம்டேசிவிர் என்னும் மருந்தினை பொது மருந்தாக (generic medicine) உற்பத்தி செய்திட வேண்டும் என்று அதன் உற்பத்தி நிறுவனத்திற்கு கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் கீழ் கட்டளை பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.  

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரெம்டேசிவிர் (Remdesivir) என்னும் கிலீட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதில் பலன் அளித்திருப்பதாகக் காட்டியிருக்கிறது. அமெரிக்கா இந்நிறுவனத்தின் அனைத்து மருந்துகளையும் அடுத்த  மூன்று மாதங்களுக்கு வாங்கிப் பதுக்கிக்கொள்ள இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.  இவ்வாறு அது பதுக்கிக்கொண்டுவிட்டால் உலகில் வேறெங்கும் அந்த மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டிய இம்மருந்தின் விலை 3,000 டாலர்களாக (அதாவது 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக) இருக்கிறது. கிலீட் நிறுவனத்தின் உரிமத்தின் கீழ் ரெம்டேசிவிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் உள்ள ஐந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் இம்மருந்து உற்பத்தியான பிறகு, ஐந்து நாட்கள் உட்கொள்ளக்கூடிய இம்மருந்தின் விலை ‘சலுகை’ விலையில் 400 டாலர்கள் அல்லது 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. வல்லுநுர்கள் இதன் உற்பத்திச் செலவினம் என்பது வெறும் 10 டாலர்களுக்கு (அதாவது 750 ரூபாய்க்கு)க் குறைவாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் இதன் விலை 100 ரூபாய் ஆகும். ஆனால், கிலீட் நிறுவனம், தனக்கு இருக்கும் கண்டுபிடிப்பு உரிமத்திற்கான ஏகபோக உரிமை (Patent monopoly)யின் காரணமாக இதன் அடக்கவிலையை விட நூறு மடங்கு விலை நிர்ணயம் செய்து உலகையே சூறையாட முடிவு செய்திருக்கிறது.

இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஜெனரல் (DCGI-Drug Controller General of India), கோவிட் 19, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திட  இந்த மருந்தின் பயன்பாட்டுக்காகத் தன் ஒப்புதலைத் துரிதப்படுத்தி இருக்கிறார்.  ஆனாலும், அமெரிக்கா இங்கே உற்பத்தி செய்யப்படும் அனைத்து மருந்துப்பொருட்களையும் ஒட்டுமொத்தமாக வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் எவருக்கும் இம்மருந்து கிடைக்காது அல்லது கிடைத்தாலும் அநியாய விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இடதுசாரிகளின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட, இந்திய கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் (92 of India’s Patent Act) கீழ், இந்தியாவில் இம்மருந்தை உற்பத்தி செய்வதற்கு கட்டாய உரிமம் வழங்குவதற்கான உரிமையை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவில் பொது மருந்து உற்பத்தியாளர்கள் (generic drug manufacturers), ரெம்டேசிவிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92-A பிரிவின்கீழ் இம்மருந்தைக் கோரும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் கட்டாய உரிமம் வழங்கிட முடியும்.   

எனவே மத்திய அரசாங்கம், ரெம்டேசிவில் மருந்தை உற்பத்தி செய்திட, இந்தியாவில் உற்பத்தி செய்ய வல்லமை படைத்த அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் கட்டாய உரிமம் உடனடியாக வழங்கிட வேண்டும். உலகில் பொது மருந்துகள் உற்பத்தி செய்வதில் வல்லமை படைத்த இந்திய மருந்து நிறுவனங்களுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க மறுப்பதற்கு காரணம் எதையும் கூற முடியாது.

மத்திய அரசு, கண்டுபிடிப்பு உரிமச்சட்டத்தின் 92ஆவது பிரிவைப் பயன்படுத்தி, ரெம்டேசிவிர் மருந்தை, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உயிர்காக்கும் முக்கியமான மருந்தாகக் கருதி,  பொது மருந்தாக உற்பத்தி செய்திட, உடனடியாக  உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Check Also

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்

டெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் ...