ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருள்கள்உடனடியாக வழங்கிடுக!

இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை..

புதுதில்லி, மே 30

மக்களின் உயிர்களைக் காத்திடும் விதத்தில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருட்களை உடனடியாக அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.-லிபரேசன்), திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நேற்றையதினம், மோடி-2 ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி,  வெளியிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத் தரவு, நாட்டில் பொருளாதாரம் அழிந்திருப்பது சம்பந்தமாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் மீத சுமைகள் ஏற்றப்பட்டிருப்பது சம்பந்தமாகவும் இடதுசாரிக் கட்சிகள் என்ன கூறிவந்தனவோ அவற்றை உண்மை என மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

மக்களின் வாழ்க்கை அழிவுப்பாதையில் வேகமாக சென்றுகொண்டிருந்த சமயத்தில், கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றின் தாக்குதலும் அதனை அரசாங்கம் எதிர்கொள்வதில் படுதோல்வி அடைந்திருப்பதும் சேர்ந்துகொண்டிருக்கிறது. நாடு தழுவிய அளவில் திட்டமிடப்படாது  திடீரென ஒரு நான்கு மணி அறிவிப்பில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது மேலும் மனிதாபிமானமற்ற முறையில் துன்பதுயரங்களைத் திணித்துள்ளது. \

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை தொடர்கிறது. அவர்களின் மத்தியில் தாங்கமுடியாத அளவிற்கு, பசி-பட்டினி, சோர்வு, விபத்துக்கள் போன்றவற்றின் விளைவாக உயிரிழப்புகளும் தொடர்கின்றன.  அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள், கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வல்லமையையும் வலுப்படுத்திடவில்லை,  இத்தகைய நிலைமைகளில் மக்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான நிவாரண உதவிகளையும் அளித்திடவில்லை.

எனவே, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை மீளவும் வலியுறுத்துகின்றன.

1   வருமான வரி செலுத்தாத குடும்பத்திற்கு வெளியேயிருக்கின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாத காலத்திற்கு ரொக்க மாற்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

2   ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் பத்து கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அளித்திட வேண்டும்.

3   வீதிகளில் நிர்க்கதியாய் இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு, உணவு, தண்ணீர் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதிகளை இலவசமாக அளித்திட வேண்டும்.

4   மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ், குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு கூடுதலான ஊதியத்துடன் வேலை அளித்திட வேண்டும். நகரப்புற ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுதும் உள்ள அனைத்துக் கிளைகளும் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திடும் விதத்தில் ஸ்தலமட்டத்தில் உள்ள நிலைமைகளுக்கேற்ப கிளர்ச்சி நடவடிக்கைகளை, தனிநபர் இடைவெளியை உறுதிப்படுத்திக்கொண்டும் முகக்கவசம் அணிந்துகொண்டும்,  போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிவிக்கை வெளியிட்டுள்ளன.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...