வங்கிப் பணிகளில் SC/ST/OBC இட ஒதுக்கீட்டு இடங்கள் மோசடியாக பறிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு சட்டம் இயற்றியபோது, இதனால் ஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நலன்கள் பாதிக்கப்படாது என தெரிவித்தது. பொதுப் பிரிவில் இருந்தே, பொருளாதாரத்தில் நலிந்த இட ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், பயிற்சி அதிகாரிகளை தேர்வு செய்ய வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து 10 சதவீத இடங்களை மோசடியாக குறைத்து அவற்றை பொது பிரிவிலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவிற்கும் மாற்றியுள்ளது.

பொதுப் பிரிவு இடங்கள் 50%, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10%, பட்டியலினம், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 40% என்ற அளவில் இட ஒதுக்கீடு அறிவிப்பில் உள்ளது. அதாவது பட்டியலின இட ஒதுக்கீடு 15% என்பதற்கு பதிலாக 13%ஆக குறைக்கப்பட்டுள்ளது, பழங்குடியினர் ஒதுக்கீடு 7.5% என்பது 6% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% வழங்கவேண்டிய இட ஒதுக்கீட்டை வெட்டி 21% ஆக பறித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செய்யப்பட்டிருக்கும் மோசடியும், சமூகநீதியின் முக்கிய அங்கமாக உள்ள இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதலுமாகும். இந்த அறிவிப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெறச் செய்வதுடன், இந்த அறிவிப்பைச் செய்திருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் ...