வடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று நீதிமன்றத்தில் கூறிக்கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், தில்லிக் காவல்துறை ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தில்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட வர்கள் எண்ணிக்கையில் ஆழமான முறையில் தவறு இருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

நீதிமன்றத்தில் தில்லிக் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுதி வாக்குமூலங்களில் வட கிழக்கு தில்லியில் கலவரங்களின்போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 என்றே கூறிக்கொண்டிருக்கிறது.

எனினும், முகமது முல்லாக் என்பவரின் மகன் சிக்கந்தர் என்பவர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர் 2020 பிப்ரவரி 27 அன்று கொல்லப்பட்டார். அவருடைய பிரேத விசாரணை அறிக்கையில் பிப்ரவரி 27 அன்று இரவு 11.30 மணியளவில் சுய உணர்வின்றி கஜவுரி சவுக் மேம்பாலத்திற்குக் கீழ் கிடந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் மார்ச் 19 வரை அவர் அடையாளம் காணப்படவில்லை. மார்ச் 19 அன்றுதான் அவர் சிக்கந்தர் என காவல்துறையினரின் பதிவுருக்களில் அடையாளம் காணப்பட்டது.

இவருடைய சடலக்கூராய்வு சான்றிதழ், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் இறந்தார் என்று காட்டுகிறது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை அளித்திடுமாறு கோரி, அவருடைய சகோதரர் முகமது இஸ்பாக் பலமுறை கஜவுரி காவல்நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். எனினும் அவர் இறப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இவர் மரணத்திற்கு, இழப்பீடு ஏதாவது ஏற்பாடு செய்யப்படும் என்றும், அவர் பெயர் பட்டியலில் சரிசெய்யப்படும் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பஜன்புராவில் இருந்த இஸ்ஃபாக்கின் கடை தீக்கிரையாக்கப்பட்டு, சூறையாடப்பட்டது. கோண்டாவில் இருந்த அவருடைய சகோதரியின் வீடும் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டது. இவர்களில் இளையவரான சிக்கந்தரும் கொல்லப்பட்டார். இக்குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக, தில்லிக் காவல்துறை, சிக்கந்தர் இறந்ததைப் பதிவு செய்ய மறுப்பதன் மூலம், அவர்களின் துன்பதுயங்களை மேலும் மோசமாக்கி இருக்கிறது.

எனவே, இதில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அளித்துள்ள பட்டியலில் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்று மாற்றி அளித்திட வேண்டும் என்றும், அதன்மூலம் சிக்கந்தர் பெயரையும் சேர்த்திட வேண்டும் என்றும், அவர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை அவருடைய குடும்பத்தாருக்கு அளித்திட வேண்டும் என்றும், இவ்வாறு இறந்தவர்கள் எண்ணிக்கையில் தவறு செய்துள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிருந்தா காரத் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...