வணிகர் சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு

 

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து டிசம்பர் 1-ல் வணிகர் சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு.

சில்லரை வர்த்தகத்துறையில் 51 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற அபாயகரமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அரசின் இந்த முடிவால் வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்திய  சந்தைக்குள் புகுந்து நுகர் பொருட்களின் ஒட்டுமொத்த விற்பனை கட்டுப்பாட்டையும் தன் வசப்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வேலையின்மை, விவசாய நெருக்கடி, பணவீக்கம், விலை உயர்வு ஆகிய துயரங்களை எதிர்கொண்டு வரும் இந்திய மக்கள் மீது இம்முடிவு பல முனை தாக்குதல்களையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தும்.

முதலாவதாக, 1.2 கோடிக்கும் அதிகமாக உள்ள இந்திய சிறுகடைகள் மீது தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியாக பகாசுர நிறுவனங்கள் தாக்குதல் தொடுக்கும். ஒரு கோடியே இருபது லட்சம் இந்திய சிறுகடைகளின் உரிமையாளர்களும், இக்கடைகளில் வேலை செய்து வரும் சுமார் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாவதாக, விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்யும் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம், அரசே விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்புகளை கைவிடுவதோடு பன்னாட்டு நிறுவனங்கள் விளை பொருட்களுக்கு தரம் நிர்ணயம் செய்து, விவசாயிகளின் விளைபொருட்கள் போதுமான தரத்துடன் இல்லை என்று கூறி, அப்பட்டமான விலை மோசடி மூலம் இந்திய விவசாயிகளின் நலன்கள் சூறையாடப்படும் ஆபத்தும் உருவாகும். ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய், காசுக்கு ரெண்டு விற்க சொல்லி  காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் என்கிற பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரம் மீண்டும் அரங்கேறும்.

மூன்றாவதாக, சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட்டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்படும் நெருக்கடி ஏற்படும். மாறாக, அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் வெள்ளமென இந்திய சந்தையில் பாயும். இறுதியாக ஏகபோகங்களாக உருவான பின்னர் கட்டுப்பாடற்ற விலைகள் மூலம் நுகர்வோர் நலனும் பாதிக்கப்படும். எனவே தான் இந்த நாசகர முடிவை எடுக்க விடாமல் நீண்ட காலமாக  போராட்டங்களின் மூலமாக இடதுசாரி கட்சிகள் தடுத்து வந்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அந்நிய அரசுகளுக்கும் பணிந்து இந்திய நலனை காவு கொடுக்கவிருக்கிறது.

ஆகவே, நேரடியாக சில்லரை விற்பனையாளர்களையும், மறைமுகமாக இந்திய விவசாயத்தையும், சிறு உற்பத்தியாளர்களையும் துயரத்தில் ஆழ்த்துகிற மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்து டிசம்பர் 1-ஆம் தேதி வணிகர் சங்கங்கள் நடத்துகிற கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

 

 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply