வனத்துறையினர் மலைவாழ் மக்கள் மீது பாலியல் வன்முறை…

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் புகுந்த வனத்துறை அதிகாரிகள், அங்கு வாழும் மலைவாழ் மக்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.

கடந்த 16 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைக்கு எதிராக நேற்றுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இரண்டாவதாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட வேண்டிய இந்த வழக்கை பெண் இன்ஸ்பெக்டர் விசாரிப்பதாக கூறியுள்ளனர். சட்டப்படி டி.எஸ்.பி அளவிலான அதிகாரி இந்த வழக்கு விசாரணைக்கு அதிகாரியாக இருக்க வேண்டும். மூன்றாவது, உணவு கொடுப்பதாக சொல்லி பெண்களை அழைத்து வந்த ஆர்.டி.ஓவின் செயல்பாடுகள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக இருப்பதான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பொது வெளியில் உடைகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ள மலைவாழ் பெண்கள், 13 வயதேயான சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கின்றனர். தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி இது பலாத்காரத்துக்கு நிகரான நடவடிக்கையாகும்.

இதுவல்லாது, மலைவாழ் மக்களின் அலைபேசியும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இரவெல்லாம் நடந்தே தங்கள் மலைப்பகுதிக்கு அந்த பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் திரும்பிச் சென்றுள்ளனர்.

உடனடியாக, தேனி மாவட்ட காவல்துறை எஸ்.பியை சந்திக்கச் சென்ற குழுவினர் – கிட்டத்தட்ட விரட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. மேற்சொன்ன புகார்களைக் கேட்டுக் கொண்ட அவர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

உடனடி உதவியாக, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர், 20 ஆயிரம் மதிப்பிலான உதவிகளை திரட்டி, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை செய்யவுள்ளனர்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...