வனவிலங்குகளால் மனித உயிரிழப்பைத் தடுத்திட நடவடிக்கை எடுத்திடுக

1.4.2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (1.4.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

வனவிலங்குகளால் மனித உயிரிழப்பைத் தடுத்திட நடவடிக்கை எடுத்திடுக

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டு மனிதர்கள் உயிரிழப்பது என்பது அன்றாட செய்திகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை தாக்கி அனீஷ், ராதாகிருஷ்ணன், மணிசேகர், கர்ணன் என நான்கு உயிரிழப்புகள் மற்றும் புலி தாக்கி ஒரு வட மாநில தொழிலாளி மரணம் என நிலைமைகள் தொடர்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் வனவிலங்கு தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு, வேளாண் பயிர்கள் அழிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது.

எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுப்பதற்கு அகழி அமைப்பது, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல கனமான இரும்பு வேலிகள் அமைப்பது, வனவிலங்குகளின் நடமாட்டத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சென்சார் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பான்களை அமைப்பது, காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட கும்கி யானைகளை பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை வனத்துறையும், வருவாய்த்துறையும இணைந்து எடுக்க வேண்டும் என பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் அரசு கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக ஒவேலி பகுதியிலும், சேரங்கோடு பகுதியிலும் ஒரே யானை தான் பல பேரை தாக்கி கொன்றுள்ளது. அப்பகுதி மக்கள் விடுபட முடியாத அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

எனவே வன விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க வருவாய்த்துறை, வனத்துறை இணைந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழ்ந்துள்ள குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தற்போது வழங்கப்படும் ரூபாய் மூன்று இலட்சத்தை உயர்த்தி பத்து லட்சம் ரூபாயாக வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...