வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் – மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் ஆய்வு

கோவை, செப். 25 –

இந்து முன்னனி பிரமுகர் படுகொலையை பயன்படுத்தி நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும், நடைபெற்ற சேதம் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஞாயிறு அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த வியாழனன்று இந்து முன்னனி அமைப்பைச்சார்ந்த சசிக்குமார் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சங்பரிவார அமைப்புகள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமாகியது. மேலும், இந்த திட்டமிட்ட வன்முறையால் பலர் தங்களது வாழ்வாதாரம் முடக்கப்பட்டு தெருவில் நிற்கும் அவலம் உருவாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுவரை அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு எழமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உடனடியாக  தலையிட்டு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆனையரை சந்தித்து மக்களின் அச்சத்தை போக்குவதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும், அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளை ஒன்றினைத்து வன்முறை சம்பவங்களை கண்டித்தும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக காவல்துறை தலைவருக்கு வன்முறை சம்பவம் குறித்தும், காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் புகார் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்து நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை விதைத்தனர். குறிப்பாக கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட துடியலூர் பகுதியில் சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர். இங்கு நடைபெற்ற வன்முறையில் மட்டும் இந்து முன்னணி மற்றும் சங்பரிவார கும்பல் சுமார் ஐந்து கோடி ரூபாயுக்கும் அதிகமான அளவில் சொத்துக்களை சேதப்படுத்தியும், அகப்பட்டதை அள்ளிக்கொண்டும் சென்றுள்ளனர். இதில் 38 கடைகளில் 13 கடைகள் எரிக்கப்பட்டும் மற்ற கடைகள் உடைக்கப்பட்டும் உள்ளது. மேலும், ஒரு வீட்டை முழுமையாக சேதப்படுத்தி விட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தும் மாடுகளை கடத்தியும் சென்றுள்ளனர். இதில் ஆறு செல்போன் கடைகள், ஒன்பது ஹோட்டல் மற்றும் பேக்கரிகள், இரண்டு செருப்புக்கடைகள், மற்றும் வளையல், பாத்திரம், ஜூஸ் கடை,  மீன் கடை, கறிக்கடை உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், இப்பகுதியில் காவல்துறையினரை தாக்கிவிட்டு காவல்துறையினரின் வாகனத்தை தீவைத்தும் எரித்தனர். மேலும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டது. மேலும், பல வாகனங்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

உங்கள் ஆதரவில் நாங்கள் உலவுகிறோம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இதனை ஆய்வு செய்கையில் சிம்சன் செல்போன் கடையின் உரிமையாளர் பெரோஸ் என்பவர் கே.தங்கவேலிடம் கூறுகையில், இந்து முன்னனி பிரமுகர் இறந்தார் என்கிற தகவலையடுத்து வன்முறை ஏற்படும் என்று தெரிந்து எனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டோம். ஆனால் பூட்டியிருந்த கதவை சிறியவகையிலான எரிவாயு சிலின்டரை பயன்படுத்தியும், கடப்பாரை போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியும் உடைத்தனர். கடையின் உள்ளே புகுந்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அள்ளிச்சென்றனர். இதனால் சுமார் 60 லட்சம் ரூபாயுக்கும் மேல் எனக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மூலதனம் முற்றிலுமாக பறிக்கப்பட்ட நிலையில் இனி என்னுடைய தொழிலை எப்படி நடத்துவேன், எனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன் என்கிற தவிப்பில் நிர்க்கதியாக தற்போது நிற்கிறேன் என்றார். இதைப்போலவே வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் உடைந்து போன இதேகுரலோடே வெளிப்படுத்தினர். அவர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்கிற தையிரியத்தோடு இருங்கள் போராட்டத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் இழப்பீட்டை பெற்றுத்தருவதற்கான முயற்சியிலும், எப்போதும் போல இயல்பான  நிலையில் வாழுவதற்கான உத்திரவாதத்தையும், மதவெறியர்களை தனிமைப்படுத்தி மக்கள் ஒற்றுமை காத்திட மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றனர். இதேபோல துடியலூர் நேருவீதியில் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிப்பதை அறிந்து தாக்குதல் நடத்த சென்றனர். அதற்குள்ளாகவே வாலிபர் சங்க தோழர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களை தங்களின் வீடுகளுக்கு கூட்டி சென்று அடைக்கலம் தந்தனர். இதனால் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் கதவுகளையும், ஜன்னல்களையும் நொருக்கிவிட்டு சென்றிருந்தனர். இங்கே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சென்றபோது, உங்களின் அரவனைப்பால்தான் நாங்கள் தற்போது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த வன்முறையை நினைத்தால் இப்போதும் கொலை நடுங்குகிறது என்று அழுது கொண்டே பேசினார் நூர்ஜகான். மேலும், இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்த நாங்கள் எங்கு செல்வது எங்கு சென்றாலும் கலவரம் என்றால் இங்கேயே இருக்கலாம் என்கிற முடிவோடுதான் இங்கு இருக்கிறோம். நீங்கள் எங்கள் அருகில் இருக்குறீர்கள் என்கிற தையிரியத்தில்தான் நாங்கள் மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார் உருக்கமாக.

காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

இதனையடுத்து வன்முறையால் சேதமடைந்த மசூதியை கண்ட தலைவர்கள் அங்குள்ள இஸ்லாமிய பெரியவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதலை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்தில் இருந்த திருச்சி சரக டிஐஜி அருண் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ரம்யபாரதி ஆகியோரை சந்தித்தனர். இதில் வன்முறை சம்பவத்தால் உண்டான சேதம் குறித்து தலைவர்கள் விளக்கினர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் தலைவர்களிடம் கூறுகையில், வன்முறையால் பாதிப்புக்குள்ளான  அனைவரையும் புகார் அளிக்க சொல்லியிருக்கிறோம். புகாரும் அளித்து வருகிறார்கள் அவர்களிடம் விபரத்தை கேட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களுக்கான பொருளாதார இழப்பை திரும்பப்பெருவதற்கான முறையில் ரசீதுகளையும் அளித்து வருகிறோம் என்றனர். மேலும், சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களை தொடர்ந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம் என்றும் இது தொடரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் உறுதியளித்தனர்.

வன்முறை நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கேசி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், வி.பெருமாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, சிபிஎம் பெரியநாயக்கன்பாளை ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி, இன்ஜினியரிங் அரங்க செயலாளர் செந்தில் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர்.

வணிகர் சங்க வெள்ளையன் ஆய்வு

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வந்திருந்தார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களோடு கலந்து பேசினார் பின்னர் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் 100க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டு சேதம் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சம்ர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனவும்.இதுவரை 20 வணிகர்கள் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...