வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம்

“தமிழை ஆண்டாள்” என்ற கவிஞர். திரு. வைரமுத்துவின் தினமணி கட்டுரையை முன்வைத்து பாஜகவின் தேசிய செயலாளர் திரு.எச்.ராஜா, திரு. வைரமுத்து அவர்களையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்ததோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான திரு.எச்.ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கு முன்னரும் திரு.எச்.ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதட்டத்தை உருவாக்குகிற பல பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதிப்பதற்கு பதிலாக கொலைவெறியைத் தூண்டும் வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி வருவதை திட்டமிட்ட முறையில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலைவெறி மிரட்டல்களும் அத்துமீறி தொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன் வெளிப்பாடே ஆகும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடந்த மோதலை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் போன்று சித்தரிக்க அவர் முயற்சித்தார். இதேபோன்று பாஜகவைச் சார்ந்த திரு.கல்யாணராமனும் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கவிஞர் திரு.வைரமுத்துவை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க முறையில் மிரட்டியுள்ளார்.

எனவே, அவர்களது இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதோடு, தமிழக அரசு உரிய முறையில் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...