வன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக! பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்

ஆண்டாண்டு காலமாக வனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், பழங்குடியினரையும் வனங்களிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவர்களைப் பாதுகாத்திடும் விதத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர்மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வனங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், பழங்குடியினரையும் வெளியேற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம், பிப்ரவரி 20 அன்று எழுத்துப்பூர்வமான ஆணை பிறப்பித்திருக்கிறது. வனங்களில் தங்களைத் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனுக்களில் பலரது மனுக்களை ஏற்காமல், நிராகரித்திருக்கிறது. தற்சமயம் (2018 டிசம்பர் வரையிலான காலத்தில்) வனங்களில் வாழ்பவர்களில் 42.19 லட்சம் பேர் தாங்கள் தொடர்ந்து வனங்களில் வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும் என்று மனுச் செய்திருந்தனர். எனினும் இவற்றில் 18.89 aலட்சம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 23.30 லட்சம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழ்ந்து வந்தவர்கள் எந்த நிமிடத்திலும் வனங்களிலிருந்து வெளியேற்றப்படலாம் என்பதாகும்.

பழங்குடி மக்களுக்கு எதிராக அரசு யுத்தம்

வனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து பழங்குடியினரையும், பாரம்பரியமாக வனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பாதுகாத்திடக் கூடிய விதத்தில் மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோருகிறோம். இவ்வாறு செய்யாவிடில் அது பழங்குடியினருக்கு எதிராக யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவே கருதப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற சமயத்தில் மிகவும் முக்கியமான வாதம் நடைபெற்ற நாளன்று, பழங்குடியினரையும், வனங்களில் வாழ்பவர்களையும் பாதுகாப்பதற்காக வாதிட வேண்டிய மத்திய அரசின் வழக்குரைஞர் வராமலே இருந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கதாகும். பழங்குடியினரின் உரிமைகளுக்குத் துரோகம் செய்திருப்பதானது, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்களுடன் மத்திய அரசின் அமைச்சகமும் சேர்ந்து கொண்டிருப்பதாகவே பொருள்படும். இவ்வழக்கு தொடுத்த மனுதாரர்களில் பலர் வனத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளாவார்கள். வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராக நின்று, வனங்களில் காலங்காலமாக வாழ்ந்து வருபவர்கள் மற்றும் பழங்குடியினர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக வலுவான நிலை எதையும் எடுத்திடவில்லை.

வன உரிமைகள் சட்டத்தினை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தைச் சார்ந்ததாகும். ஆனால் பழங்குடியினருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே வன உரிமைகள் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுவந்த அமைச்சகத்திடம் வேண்டுமென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வன உரிமைகள் சட்டத்தின் 4(5) ஆவது பிரிவு, முறையான நடைமுறையின்றி எவரொருவரும் வனங்களிலிருந்து வெளியேற்றப்படக் கூடாது என்கிறது. எனினும், இந்த நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய அதிகாரிகளே, பழங்குடியினரின் மனுக்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பதற்குப் பொறுப்பாவார்கள். வன நிலங்கள் நாட்டில் பல இடங்களில் வன நிலங்களாக அங்கீகரிக்கப்படாமல், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சுரங்கப் பணிகளுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன.

எனவே, பழங்குடியினரையும், ஆண்டாண்டு காலமாக வனங்களில் வாழ்ந்து வருபவர்களையும் வனங்களிலிருந்து வெளியேற்றுவதைத் தடுப்பதற்கு பாரபட்சமற்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இதனை அமைச்சகங்களின் பொறுப்பில் விட்டுவிடக் கூடாது. கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசாங்கம், வன உரிமைகள் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய விதத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளது. பல்வேறு மாநில பாஜக அரசாங்கங்களும் அதேபோன்று செயல்பட்டுள்ளன. உங்கள் அரசாங்கம் பல பிரச்சனைகளின் மீது அவசரச் சட்டங்கள் இயற்றியுள்ளன. பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழ்ந்து வருகிறவர்களைப் பாதுகாத்திட அதேபோன்று ஓர் அவசரச் சட்டத்தை உடனடியாக இயற்றிட முன்வர வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் லட்சக்கணக்கான பழங்குடி மக்களுக்கு  அநீதி இழைத்தது போலாகும். இவ்வாறு பிருந்தா காரத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...