வரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்!

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
 
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெள்ள நீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். உதவி பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதே மிகவும் சிரமமான பணியாக உள்ளது.
 
மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க உயிர்காக்கும் மருந்துகள் தேவைப்படுகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடைகள் போதுமான அளவிற்கு இல்லை. பெண்களுக்கு சானிடரி நாப்கின், உள்ளாடைகள் மற்றும் போர்வைகள், டவல்கள், நோய்த்தடுப்பு மருந்துகள் தேவைப்படுகிறது. கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள கேரள சகோதர, சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நம்முடைய உடனடிக் கடமையாகும்.
 
எனவே, கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள கேரள மக்களுக்கு உதவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.
 
கட்சி அணிகள் முழுவதும் உடனடியாக தமிழகம் முழுவதும் பொது மக்களிடமிருந்து கேரள வெள்ள நிவாரண நிதி வசூலிக்க வேண்டுமெனவும், மேலும் பொருட்கள், துணிகள், போர்வைகள் (புதியவை), மருந்து மற்றும் அரிசி, உணவுப் பொருட்களையும் சேகரித்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் மாநில செயற்குழு வேண்டுகிறது.
 

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...