வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு 8.12 சதவிகிதம் அல்ல – 76 சதவிகிதம் மேல்முறையீடு தேவை

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது. தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் செல்வி ஜெயலலிதாவும், அவரோடு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வருமானமாக கணக்கில் கொள்ளவில்லை என்றும், அவற்றையும் கணக்கில் கொண்டால் சட்டப்படியான அவரது வருமானம் அதிகமாக இருக்கும் என்று நிர்ணயிக்கிறார். இதனடிப்படையில் செல்வி ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து 8.12 சதவிகிதம் மட்டுமே என்றும், இது அனுமதிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தண்டனை பெற்றோர் வாங்கிய கடன்களை நீதிபதி கூட்டுகிற போது, 13.50 கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியதாக தவறாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு தவறை மட்டும் நேர்செய்தாலே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76 சதவிகிதத்திற்கும் மேல் வரும். இது சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரியாகவே சீர்தூக்கி பார்த்து தீர்ப்பளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒரு அம்சமே இந்த தீர்ப்பில் ஊனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இது தவிர பிறழ் சாட்சிகள் குறித்த நீதிபதியின் கருத்தும் தவறானதாகும். தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது சாட்சிகள் மிரட்டப்பட்டார்கள், அதன் காரணமாக பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள் என்கிற காரணத்தினால் தான் கர்நாடகா மாநிலத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு கொடுத்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்று கூறியிருப்பது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எந்த நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு மாற்றியதோ அதனடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.

1995ம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டத் தொகையை கணக்கிடும் போது ஒரு சதுர அடிக்கு 280 ரூபாய் என்று கணக்கில் கொண்டிருக்கிறார் நீதிபதி. இது அப்போது பொதுப்பணித்துறை நிர்ணயித்திருந்த ரூ. 315/-ஐ விட குறைவாகும். சாதாரணமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான தொகையை விட போயஸ் கார்டனிலும், அதுபோன்ற இடங்களிலும் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான செலவை பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள தொகையை விடவும் குறைத்து நிர்ணயித்திருப்பதும் நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதே போன்று வளர்ப்பு மகன் திருமணத்திற்கு செல்வி. ஜெயலலிதா அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 28,68,000/- என்று சொல்லப்பட்டிருக்கிறது. 1995ஆம் ஆண்டில் ஓட்டிஸ் லிப்ட் விலை ரூ. 15,000/- தான் என்று குறிப்பிட்டிருப்பது சரியான முறையில் செலவுகள் கணக்கிடப்படவில்லை என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை சந்தா சேர்ப்பு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் தனது பத்திரிகையில் வெளியிடவே இல்லாமல் ரூ. 14 கோடிக்கும் அதிகமான தொகை பெற்றதாக சொல்லியிருப்பதை ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை எவ்வித கேள்வியுமின்றி நீதிபதி குமாரசாமி அப்படியே ஏற்றிருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

மேலும் தனக்கு வாதிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை, எழுத்து மூலம் வாதங்களை முன்வைக்கவும் ஒரு நாள் அவகாசமே வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட 2 மாத காலமும் அதை கவனித்து பதிலளிக்க அரசு தரப்பு ஆஜராகவில்லை என்பது உட்பட பல அம்சங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்றங்கள் உரிய பங்காற்றும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இத்தீர்ப்பின் மீது உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கர்நாடக மாநில அரசை வலியுறுத்துகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...