வறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்

வறட்சி நிவாரணம் வழங்கிட கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிசம்பர் 20, 2016 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12-ஆம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு நிறைவு நாளான இன்று (14/11/2016) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

வறட்சி நிவாரணம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து எழுச்சிமிகு மறியல் போர்

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மாநில அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளது. நிதி  மற்றும் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதை சென்னை உயர்நீதிமன்றமே இடித்துரைத்துள்ளது. பிஜேபி தலைமையிலான மத்திய அரசு மக்கள் விரோத தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை வேகமாக அமலாக்கி வருகிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும், இக்கொள்கைகளை அமலாக்கி வருவதுடன் தமிழக நலன்களைக் காவு கொடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து வருகிறது.

தமிழகம் மிக மோசமான வறட்சியில் சிக்கி பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பருவ மழை பொய்த்துப் போனதாலும், கர்நாடக அரசின் பிடிவாதத்தாலும் காவிரி பாசனப் பகுதி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்  சாகுபடிகள் காய்ந்து கருகி விட்டன. நீர்நிலைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. பல லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட நெல், கரும்பு, மணிலா, மஞ்சள், வெங்காயம், பருத்தி மற்றும் மானாவாரி  பயிர்கள் அழிந்து நாசமாகிவிட்டன.

காவிரி பாசனப் பகுதியில் வறட்சியினால் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி சாவுகள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. கடன்  பெற்று சாகுபடி செய்த பயிர்கள் அழிந்துவிட்ட நிலையில் கடனைக் கட்ட முடியாமலும், அன்றாட குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடியாமலும் விவசாயிகள் வழியின்றி விழிபிதுங்கி நிற்கின்றனர்.

விவசாயத் தொழிலாளர்கள் வேலையும், வருமானமும் இன்றி வறுமையில் வாடுகின்றனர். பட்டினிச் சாவுகள் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவனம், புல் மற்றும் வைக்கோலுக்கு வழியின்றி விவசாயிகள் கால்நடைகளை வந்த விலைக்கு விற்று வருகின்றனர். இத்தகைய கொடுமையான நிலைமையில் வங்கிகளில் அடகு வைத்துள்ள நகைகளை ஏலம் போடுவது, கடன் பெற்றுள்ள டிராக்டர்களை பறிமுதல் செய்வது போன்ற வங்கிகளின் நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வரும் நிலையில்  தண்ணீர் திறந்து விட வேண்டுமென வற்புறுத்த வேண்டிய மோடி அரசு தனது குறுகிய அரசியல் நலன் கருதி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை மேற்கொண்டுள்ளது பெரும் துயரமாகும். அனைத்துக்கும் மேலாக காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிராகரித்தது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் அவ்வாறு உத்தரவு இட முடியாது என பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்ததன் மூலம் தமிழகத்திற்கு  மோடி அரசு பெரும் துரோகம் இழைத்து விட்டது.

கிராமப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை நிர்மூலமாக்குவதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது. ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டிய இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சராசரி 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி வழங்காததால் பெரும்பாலும் பெண்களே பணியாற்றும் இத்திட்டத்தில்   நான்கு மாதங்களாகக் கூலி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும். பேரூராட்சிப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்கும்.

தனியார், கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக கொடுக்க வேண்டிய  தொகை ரூ.1850 கோடிக்கும் அதிகமாக பாக்கி உள்ளது. இதனைப் பெற்றுத் தர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. நடப்பு ஆண்டிற்கு இதுவரை கரும்பிற்கான விலையை அறிவிக்காமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது.

முடங்கிய தொழில்துறை

தமிழக தொழில்துறை தேக்கமடைந்துள்ளது. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நொறுங்கிக் கிடக்கின்றன. பல ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பணியிலிருந்த பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். முறை சாரா தொழிலாளர்களும் பிழைப்பின்றித் தவிக்கின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/- வழங்கிடவும் மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு, கல்வியை காவிமயமாக்கும், வணிகமயமாக்கும் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை மாநிலங்கள் மீது மத்திய அரசு திணித்து வருகிறது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை மோடி அரசின் நிர்பந்தத்தால் அதிமுக அரசு ஏற்றுக் கொண்டு நவம்பர் 1 முதல் செயல்படுத்தி வருகிறது. இதனால் துவக்கத்தில் ரூ.1190 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதோடு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கான உணவுப் பொருள் ஒதுக்கீடு குறையும் ஆபத்தும் உள்ளது. ஏற்கனவே பொதுவிநியோகத் திட்டம் சீர்குலைந்துள்ள நிலையில் இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.

மின் உற்பத்தி, மின் விநியோகம் உட்பட மின் துறையினை முழுமையாக தனியார் மயமாக்கும் உதய் திட்டத்தை அதிமுக அரசு தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் உதய் திட்டத்தின் மூலம் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். அதோடு மின்கட்டணம் உயரும் ஆபத்தும் உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு மூடப்படுகின்றன. இதனால் துவக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை வேகமாக தனியார்மயமாகி வருகின்றது. இவர்களது கட்டணக் கொள்ளையால் ஏழை எளிய மாணவர்கள் கல்விச் சாலைகளிலிருந்து விரட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

மருத்துவ கல்வியில் மாணவர்  சேர்க்கைக்கு தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் தேசிய நுழைவுத் தேர்வினை (NEET) தமிழக அரசு மறைமுகமாக ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பறிபோகும் வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்புக்கான மத்திய அரசு  தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுத வேண்டியிருப்பதால் ரயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பிற மாநிலத்தவர்களே தேர்வு பெறுவதால் தமிழ்  மட்டுமே அறிந்த மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது, எனவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மத்திய அரசு தேர்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைத்துத் துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்புவதோடு, தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயர்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி ஓய்வுப் பலன்கள் கூட வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அனுதினமும் மோசமடைந்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக்  கொண்டுள்ளன. குழந்தை திருட்டு அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது. கூலிப் படையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வழிப்பறி, திருட்டு, கொள்ளை தடையின்றி நடந்து வருகின்றன. ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வழக்கில் கூட இன்னமும் துப்புத் துலக்கப்படவில்லை.

ஆணவக் கொலைகள், தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது மட்டுமின்றி, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கிட வகை செய்யும் வன உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டிலேயே இதை நடைமுறைப்படுத்தாக ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்பதிலிருந்து ஆதிவாசி மக்கள் நலனில் தமிழக அரசின் அக்கறையின்மை அம்பலப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு இனச் சான்றிதழ் கிடைப்பதும் குதிரைக் கொம்பாக உள்ளது.

நகர்மயமாக்கல் அதிகரித்துவரும் சூழலில் நகர்ப்புறங்களில் குடிநீர், திடக்கழிவு மேம்பாடு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சீர்குலைந்து கிடக்கின்றன. பல நகரங்களில் குடிநீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, குடிநீரில் சாக்கடை கலந்து வருவதும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வருகின்றன. தொற்று நோய்கள், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகள் உட்பட பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு மருத்துவ மனைகளில் போதுமான அடிப்படை வசதியின்மையால் சிகிச்சைக்காக மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி தள்ளப்பட்டு பெரும் துயரத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

கூடங்குளத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மோடி அரசு 3 மற்றும் 4-ஆவது அணு உலைகளை அமைத்திட உடன்பாடு செய்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. ஒரே இடத்தில் அணு உலைப் பூங்காக்களை அமைப்பது மக்களின் உயிருக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முயற்சியை முற்றாக கைவிட வேண்டும்.

எழுச்சிமிகு மறியல்

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளைத் துவக்கிடவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசின் மக்கள் விரோத தாக்குதல்களை எதிர்த்தும், விண்முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரியும், மத்திய அரசு காவிரி மேம்பாட்டு வாரியத்தை அமைக்க கோரியும் 2016 டிசம்பர் 20 ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு எழுச்சிமிகு மறியல் போராட்டத்தை நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...