வளர்ச்சிக்கான திட்டமுமில்லை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுமில்லை:தமிழக பட்ஜெட் குறித்து சிபிஐ(எம்) கருத்து!

தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதிமுக அரசினுடைய 2015-2016-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தினுடைய வளர்ச்சிக்காண திட்டமுமில்லை. மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளுமில்லை. பட்ஜெட் மாநிலத்திலுள்ள உண்மை நிலையை மூடி மறைத்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வந்த நோக்கியா உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் மூடப்பட்டதால் 25,000-த்துக்கும் மேற்பட்ட நிரந்தர, காண்டிராக்ட் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். ஆலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்ததை வேடிக்கை பார்த்த மாநில அரசு உண்மை நிலையை மறைத்து உலகிலேயே தொழில்மயமான பகுதிகளில் ஒன்றாக மாநிலத்தை திகழச் செய்யப்போவதாக பட்ஜெட் மூலம் கூறுகிறது. தொழிலாளர்களுக்கான நலவாரியங்களின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கும் அவலத்தை மாற்ற எந்த அறிவிப்பும் இல்லை.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மாநில அரசு சிறு,குறு தொழில்களை பாதுகாக்க, ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்திலுள்ள 4 1/2 லட்சம் சிறு, குறு தொழில்களில் சரிபாதி தொழில்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறி நலிவடைந்து வருவதால் விவசாயத்தை நம்பியுள்ள ஒரு பகுதியினர் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி குடிபெயரும் அவல நிலை தொடர்கிறது. கடந்த ஆண்டு நெல்லுக்கும், கரும்புக்கும் மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலைக்கு மேல் மாநில அரசு கூடுதலாக கொடுத்ததாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், முந்தைய ஆண்டு அறிவித்த தொகைக்கு மேல் சென்ற ஆண்டு கூடுதலாக அளிக்கவில்லை என்ற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும் பகுதியினருக்கு கடன் கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டுக்கான இலக்கு 5500 கோடி ரூபாயாக இருந்தாலும் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்குமா? என்பதுதான் கேள்வி.

ஐசிடிஎஸ் மற்றும் பள்ளிகளில் மதிய உணவுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட பெரிதாக உயர்த்தப்படவில்லை.

மின்துறையில் சரியாக திட்டமிடாதது, நிர்வாக சீர்கேடு, முறைகேடு போன்ற காரணங்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாரத்தை மக்கள் மீது சுமத்த மின் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியது. உடன்குடி மின்திட்டத்திற்கான டெண்டரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ததே முறைகேடு நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டதாகவும், சில தொடக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் தரம் உயர்த்தியதாக பட்ஜெட்டில் கூறும் மாநில அரசு சமீப காலத்தில் மூடப்பட்ட 1500 அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவிலலை. சுமார் 2000 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20 அல்லது இதற்கும் குறைவாக உள்ளதை அதிகரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் அரசினுடைய அடிப்படை நோக்கம் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதே. அரசுப் பள்ளிகளை பாதுகாக்க உருப்படியான எந்த ஆலோசனையும் பட்ஜெட்டில் இல்லை. உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார் மயமாகிட அனுமதித்து விட்டு, தனியார் சுயநிதிக் கல்வி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளதை அரசின் சாதனையாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் உயர்கல்வி என்பது பெரும்பான்மையாக வசதி படைத்தவர்களுக்கே என்றாகி விட்டது. தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்ற சட்டப்பிரிவு பரவலாக மீறப்படுவதை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோக முறையை பொருத்தவரை 5300 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-2014-லிலேயே 5000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் கழித்து வெறும் 300 கோடி அதிகரிப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே மத்திய அரசு உணவுப் பாதுகாப்பை கைகழுவி விடும் நிலையில் மாநில அரசின் ஒதுக்கீடும் இவ்வளவு குறைவாக இருந்தால் பொது விநியோக முறையை பாதுகாக்க முடியாது.

கடந்த 3 ஆண்டு காலமாக தமிழகத்திலுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளிலுள்ள மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. இதனால் மேற்கண்ட விடுதிகளில் வழங்கப்படும் உணவு, விடுதிகள் பராமரிப்பு தரம் உள்ளதாக இல்லை.

கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை. பலருக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்படவில்லை. மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் பலவீனங்கள் நீடிக்கின்றன. துறைவாரியான ஒதுக்கீட்டில் பெண்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலின நிகர்நிலை கண்ணோட்டத்துடன் பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்து வருவதாக பட்ஜெட் கூறுகிறது. ஆனால், உண்மை நிலை வேறானது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 100 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு சமூக விரோத, சாதி ஆதிக்க பின்புலம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு சிறப்பாக பேணிக்காப்பதாக கூறுவது உண்மைக்கு மாறானது.

மொத்தத்தில் மாநில அதிமுக அரசினுடைய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டமுமில்லை, குவிந்து கிடக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...