வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்வதுடன், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.8.2019) உயர்திரு. காவல்துறை தலைவர் (டிஜிபி) அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.


பெறுநர்
உயர்திரு. காவல்துறை தலைவர் அவர்கள்,
தமிழக காவல்துறை தலைமையகம்,
மயிலாப்பூர்,
சென்னை – 600 005.


அன்புடையீர்! வணக்கம்.
பொருள்:- திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்தில் – விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருமதி. லீலாபாய் என்பவரை – கூடன்குளம் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தாக்கியதில் மரணம் – இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு – இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட  கோருதல் தொடர்பாக: 
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை விசாரணைக்காக வள்ளியூர் காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் 17.8.2019 அன்று அழைத்துச் சென்றுள்ளனர். 18.8.2019 அன்று திருமதி லீலாபாய் அவர்கள் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் கூடங்குளம் ஆய்வாளர் அசோகன் என்பவர் லீலாபாய் அவர்களை காவல்நிலையத்தில் வைத்து அடித்து, துன்புறுத்தி, லத்தியால் குத்தியதில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக மாண்புமிகு வள்ளியூர் நீதிபதி அவர்களுக்கு, வள்ளியூர் காவல்நிலைய காவலர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் மேற்கண்ட தகவல்களையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
எனவே, தாங்கள் உடன் தலையிட்டு, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, கூடன்குளம் ஆய்வாளர் அசோகன் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், இவ்வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...