வழக்கறிஞர்களுக்கு மார்க்சி்ஸ்ட் கட்சி அன்பான வேண்டுகோள்!

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு 12-01-2012 அன்று நீதிமன்ற புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்களை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு என கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது. நடந்தது என்ன என்று விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம் என்ற கிராமத்தில் வாழையடி வாழையாக நீண்ட காலமாக 915 ஏக்கர் நிலம் கிராம மக்கள் (213 விவசாய குடும்பங்கள்) பயன்பாட்டிலும் அனுபவத்திலும் இருந்து வந்தது. அந்த நிலத்தை  திருநெல்வேலியைச் சார்ந்த மேடைத்தளவாய் திருமலையப்பன் என்பவர் தூத்துக்குடி வழக்கறிஞர் திரு.பி.செல்வம் அவர்களின் சகோதரர்களான 1. பி.சண்முகவேல், 2.பி.சங்கரன் மற்றும் இவர்களது பினாமிகளான 3.ஜெயக்குமார், 4. சொர்ணம், 5.சின்னமுத்து, 6.ஆறுமுகம், 7.பேச்சிமுத்து ஆகியோருக்கு மேற்கண்ட விவசாயிகளின் நிலத்தில் 542 ஏக்கரை  2008-ல் மோசடியாக கிரயம் செய்து கொடுத்தார். மிச்சமுள்ள 373 ஏக்கர் நிலம் திரு.பி.செல்வம் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு மோசடியாக கிரையம் செய்யப்பட்டது. 

இந்த மோசடிக்கு எதிராக 3-8-2009 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஆர்.டி.ஓ. போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து நிலத்தை மீட்டுக் கொடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மோசடிக் கிரயப்பத்திரத்தை வைத்து திரு.பி.செல்வத்தின் சகோதரர்களும், மற்றவர்களும் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொண்டார்கள்.கிராமத்து மக்கள் ஆட்சேபித்தவுடன் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அளிக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்தார்கள். தற்பொழுதும் 915 ஏக்கர் நிலத்தில் மேற்கண்ட 213 விவசாயிகள் தான் சாகுபடி செய்து வருகிறார்கள். நிலம் விவசாயிகளுக்கு சொந்தமென்றும், நடைபெற்றது மோசடிக் கிரயம் என்றும் அறிவித்த அதிகாரிகள் இதுகுறித்து மோசடியாக கிரயம் பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளட்டும் என்று அறிவித்து விட்டார்கள்.

கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெய்வச்செயல்புரம் கிராமத்து மக்களுடைய  பயிர் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு மனு செய்திருந்தார்கள்.

மேற்கண்ட திரு.பி.செல்வம் அவர்கள் மோசடிக்கிரயம் பெற்றவர்கள் சார்பாக பயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையென்று முதலமைச்சர் உள்ளிட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு நட்டஈட்டுக்கு உத்தரவிட்டனர். வெள்ளத்தால் பயிருக்கு எந்த பாதிப்புமில்லை என முதல்வருக்கு கடிதமெழுதிய திரு.பி.செல்வத்தின் சகோதரர்கள் இருவர் உள்ளிட்டவர்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூபாய் 9 லட்சம் நட்டஈட்டுத் தொகையை 26-2-2011ல் போலி ஆவணங்களைக் காட்டி முறைகேடாக பெற்றுச் சென்று விட்டனர். இந்த மோசடியை ஆட்சேபித்து உரியவர்களுக்கு நட்ட ஈட்டுத் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தியது.

இதன்மீது விசாரணை நடத்திய ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திருமதி பி.வசந்தா அவர்கள் பட்டா எண் 31-ல் கண்ட புல எண்களில் சாகுபடி செய்துள்ளதாக போலி ஆவணங்களைக் காட்டி மேற்படி வங்கியிலிருந்து நிவாரணத்தொகையை கீழ்க்கண்ட 6 பேர்கள் முறைகேடாகப் பெற்றுச் சென்றுள்ளார்கள். 1. திரு.பி.சங்கரன், 2. பி.சண்முகவேல், 3. சொர்ணம், 4.சின்னமுத்து, 5.ஆறுமுகம், 6.ஜெயக்குமார் மேற்படி 6 நபர்களின் வங்கிக்கணக்கினை முடக்கம் செய்திட வேண்டும் – என உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சியினால்  அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலச்சொந்தக்காரர்களான விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை  வழங்கினார்கள். போலி  ஆவணங்கள் மீது தவறான முறையில் நட்டஈட்டுத் தொகையை பட்டுவாடா செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெய்வச் செயல்புரத்தில் திரு.பி.செல்வம் மற்றும் அவர்களது சகோதரர்களும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து செய்த மிகப்பெரிய நில மோசடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2008-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறது. தெய்வச்செயல்புரத்தில் வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்படவில்லையென முதல்வருக்கு மனு செய்துவிட்டு, பயிர் பாதிப்பிற்கு அரசு நட்டஈடு வழங்கிய போது போலி ஆவணங்களைக் காட்டி நட்ட ஈட்டுத் தொகையை அபகரிப்பதற்கு துணையாக நின்ற  திரு.பி.செல்வம் அவர்கள் தெய்வசெயல்புரத்தின் கிராமத்து விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக தீங்கிழைத்து வருகிறார். விவசாயிகளின் மரங்களை வெட்டிச்சென்றது, கல்தூண் வேலியை உடைத்து கம்பிகளை நாசப்படுத்தியது, அடியாட்களுடன் விவசாயிகளை தாக்குவது, கம்பி வேலிகளை திருடிச் சென்றது போன்ற செயல்களுக்காக விவசாயிகள் கொடுத்த மனுவின் பேரில் வழக்கறிஞர் திரு.பி.செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திரு.பி.செல்வத்தின் செயல் ஒரு சமூக விரோத செயல். இவர் மீது போடப்பட்ட  வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றுதான் 2012 ஜனவரி 5,6 தேதிகளில் தூத்துக்குடியில் நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது. தெய்வச்செயல்புரம் கிராமத்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த, நிலமோசடி செய்த திரு.பி.செல்வத்தின் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கக்கோருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்தலைவர்கள் வழக்கறிஞர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள்.

அப்பொழுது திரு.பி.செல்வம்  மற்றும் அவரது நண்பர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டார்கள். இதில் காயம்பட்ட கட்சித்தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பி. செல்வமும் அவரது நண்பர்களும் மருத்துவமனைக்குள் சென்று நகரச்செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட தோழர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மருத்துவ மனைக்குள் சென்று கட்சித்தலைவர்களை தாக்கிய செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அன்று இரவு (6-1-2012) கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர். கனகராஜ் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் வீட்டில் தனியாக இருந்த கனகராஜ் அவர்களின் மனைவி விஜயா காயமடைந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இவைதான் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள்.

கிராமத்து விவசாயிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ வழக்கறிஞர் என்ற அடிப்படையில் திரு. பி. செல்வத்தின் மீது  புகார் கொடுக்கவில்லை. காவல்துறையும் அந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவில்லை. தெய்வச்செயல்புரத்தில் அவர் செய்த நிலமோசடி மற்றும் சமூக விரோதச் செயல்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞர் என்ற அடிப்படையில் திரு.பி.செல்வம் அவருடைய வழக்கறிஞர் பணியைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. எதிர்காலத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வழக்கறிஞர்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மகத்தானது. மக்களுடைய ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் வழக்கறிஞர்களுக்கு முக்கியமான பங்குண்டு. வழக்கறிஞர் பணியை  ஒரு புனிதமான பணியாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வரலாற்றில் வழக்கறிஞர்களாக பணியைத் துவங்கிய பலர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களாக உருவானார்கள். தமிழகத்தில் மறைந்த தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், தோழர் ஏ.பாலசுப்ரமணியன் போன்றவர்களெல்லாம் வழக்கறிஞர்களாக பணியைத்துவங்கி உழைக்கும் மக்கள் நலன் காக்க கட்சியில் சேர்ந்து கட்சியின் தலைவர்களாக விளங்கினார்கள். இவ்வாறு ஏராளமான உதாரணங்கள் சொல்ல முடியும்.

எனவே, வழக்கறிஞர் என்ற புனிதமான பணியை செய்யும் ஒருவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் அவருடைய சமூக விரோதச்செயலை ஆதரிக்கலாமா?   எனவே, 12-1-2012 அன்று நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர்களையும், வழக்கறிஞர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், ஒரு வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நான் அன்போடு வேண்டுகிறேன். 

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply