வாக்களித்த தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படுத்தி போட்டியிட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழித்துறை, சிவகங்கை நகராட்சிகளிலும், 5 பேரூராட்சிகளிலும் மன்றத்தலைவர்கள் பொறுப்பிற்கு வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 மாநகராட்சி வார்டுகள், 20 நகராட்சி வார்டுகள், 101 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 25 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட  ஊராட்சிமன்றத் தலைவர்கள் பொறுப்புகளுக்கு வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மக்களிடம் இருந்த அதிருப்தி, கோபம் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலித்துள்ளது. இது அ.இ.அ.தி.மு.கவின் வெற்றிக்கு உதவியுள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பெருமளவு பணப்பட்டுவாடா செய்தனர், பரிசுப் பொருட்களும் வழங்கினர். இது இரண்டு கட்சிகளின் வெற்றிக்கும் உதவியுள்ளது. மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி உள்ளாட்சி மன்றப் பொறுப்புகளில் இருப்பதன் மூலமே நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கும் என்ற ஆளுங்கட்சியின் பிரச்சாரம் அதிமுகவின் வெற்றிக்கு பயன்பட்டுள்ளது.

எனினும் தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இதர பல மாநிலக் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும். இது அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்களிடம் உருவாகி வரும் கருத்தின் வெளிப்பாடாகும்.

இத்தகு சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக அணி வேட்பளார்களுக்கும், சிபிஎம் – தேமுதிக ஆதரவோடு போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, சிபிஐ அணிகளுக்கும்,  இதர ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்கள் / பிரதிநிதிகள் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பார்கள். உள்ளாட்சி பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்படுவதை உறுதி செய்வதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கிட வேண்டுமென்றும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 


 

Check Also

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

Leave a Reply