வாக்குகளை விலைபேசுவோருக்கு தண்டனை வழங்கிடுக !

தேர்தலை வியாபாரமாக்காதீர்!
வாக்குகளை விலைபேசுவோருக்கு தண்டனை வழங்கிடுக !
மாற்று அரசியல் வெற்றிகாண சிபிஐ(எம்)-ஐ ஆதரிப்பீர்!

ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்து கொண்டிருக்கும் பண அரசியலும், பிண அரசியலும் அரசியல் அநாகரீகத்தின் உச்சகட்டமாக மாறியிருக்கிறது. தேர்தல் என்பது மிகப் பெரும் ஜனநாயக நடவடிக்கை. ஒவ்வொரு கட்சியும், மக்களிடம் அரசியல் பேசி, கொள்கைகளை சொல்லி வாக்களிக்கக் கோரினால் அது அரசியல். ஆனால் அதற்கான வெளி சுருங்கிக் கொண்டே வருகிறது. அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்படும் போது, தேர்தல் வெறும் வியாபாரமாக மாறிப் போய் விடுகிறது என்பதை ஆணி அறைவது போல ஆர்.கே.நகர் காட்டிக் கொண்டிருக்கிறது. இவர் கொடுத்தார் என்று புகார் சொல்லும் அவரும் கொடுக்கிறார். திருமங்கலமும் ஸ்ரீரங்கமும் ஒரே ஃபார்முலா தான். அதிமுகவின் இரு பிரிவுகளும், திமுகவும் இதில் முழு முதல் குற்றவாளிகள்.

உலக சுகாதார தினத்தன்று தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை என்ன? சுகாதார துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 256 வாக்கு சாவடிகளில் 2,25,000 வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வழங்க திட்டமிடப்பட்ட ஆவணம், வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர் உதவியாளர் வீட்டில் பல கோடி சிக்கியிருக்கிறது. வருமான வரித் துறை, சேகர் ரெட்டியின் அரசியல் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை செய்திருந்தால், இன்னொரு தரப்பு எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிந்திருக்கும். இது செலக்டிவ் அம்னீஷியாவா என்ற ஐயம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக, திமுகவினர் பல இடங்களில் கைது செய்யப்பட்ட தகவலும் வெளிவந்திருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கும் போது, ஆளும் கட்சி அதைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வுரிமை பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றைத் தீவிரப்படுத்தும் கொள்கைகளே பின்பற்றப்படுகின்றன. பிரதான எதிர் கட்சியும், ஆளும் கட்சியை விமர்சிக்கிறார்களே தவிர, அக்கொள்கைகளைப் பற்றி பேசுவதில்லை. தேர்தல் வந்தால், வாக்காளர்களை விலைக்கு வாங்கும் வியூகத்தை மட்டும் வகுத்துக் கொள்கிறார்கள்.
தேர்தலை வியாபாரமாக்கி, ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக சம்பாதித்த கருப்பு பணத்தின் ஒரு பகுதியை செலவழிப்பதும், அதை முதலீடாக்கி வென்ற பிறகு பல மடங்கு லாபம் எடுப்பதற்கான உயர்மட்ட ஊழலை செய்வதும் இந்நடவடிக்கையின் மூலம் தொடர்கிறது. இது ஒரு விஷ சக்கரம். இதை அனுமதிப்பது, மக்களின் வாழ்வுரிமையை 5 ஆண்டு காலம் அடகு வைப்பதற்கு ஒப்பாகும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை, இச்சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குற்றம் செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சென்ற சட்டமன்ற தேர்தலின் போது, கட்டுக்கட்டான பணத்துடன் பிடிபட்ட கண்டெயினர்களின் கதை என்னவாயிற்று என்பது தெரியவில்லை. அரவக்குறிச்சி தொகுதியில் பண பட்டுவாடா தொடர்பாக பல கோடி பணமும், நோட்டு எண்ணும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. தொடர் நடவடிக்கை குறித்து தகவல்கள் இல்லை. இதில் எல்லாம் சிக்குபவர்கள், பொதுவாக அம்புகள் தான். எய்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
மக்கள் விழித்துக் கொள்ளும் போது தான் மாற்றங்கள் பிறக்கும். ஆர்.கே.நகர் இடை தேர்தல் தமிழகமே உன்னிப்பாக கவனிக்கும் தேர்தலாக மாறியிருக்கிறது. இத்தேர்தலில் ஊழல் பேர்வழிகள் ஒதுக்கப்பட்டால், அது தமிழகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும். மாநில அளவில் மாற்றம் ஏற்பட கட்டியம் கூறும். இப்பொறுப்பை உணர்ந்து, மாற்று அரசியலுக்குப் பாடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

ஐநா சபை வாக்கெடுப்பு : இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் துரோகம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் !

இலங்கையில் நீண்டகாலமாகவும், இறுதிக்கட்ட போரின் போதும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித ...