வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினரின் தில்லுமுல்லுகளை தடுத்திட நடவடிக்கை எடுத்திடுக!

இன்று (19.10.2011) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது பழனி நகரில், பழனி நகராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அஇஅதிமுகவைச் சார்ந்த பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அவருடன் வேறு சிலரும் பல வாக்குச் சாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவ்வாறு நுழைந்ததை பழனி நகராட்சி 25ம் வார்டு தற்போதைய உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான தோழர். கந்தசாமி ஆட்சேபித்தபோது சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்றவர்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல்,  “வாக்கு எண்ணிக்கையின்போது முடிவு எப்படி இருந்தாலும் பழனி நகராட்சியின் தலைவராக எங்கள் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வைப்போம்” என மிரட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பல இடங்களில் முறைகேடாக நடக்க திட்டமிடுகிறார்களோ என்ற ஐயத்தை இச்சம்பவமும், சிவகாசி உட்பட சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களும் வெளிப்படுத்துகின்றன. பழனியில் நடைபெற்ற ஆளும் கட்சியினரின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.

மேலும் இத்தகைய சம்பவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 21.10.2011 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை முகவர்களைத் தவிர ஆளும் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது வெளியாட்களோ அத்துமீறி யாரும் நுழைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்; அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வெப்கேமிராக்கள் பொருத்தி வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை பதிவு செய்யுமாறும்; ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வெளிமாநிலத்தைச் சார்ந்த பார்வையாளர் ஒருவர் இருப்பதை உத்திரவாதம் செய்யுமாறும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


 

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply