வாலிபர் மாணவர் இளம்பெண்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (01.01.2017) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:

வாலிபர், மாணவர், இளம்பெண்கள் மீது பள்ளிக்கரணை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை. மத்திய அரசின் தவறான  நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 31.12.2016 அன்று சென்னை, மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இந்தச்செயலை கண்டித்த வாலிபர் சங்கத் தோழர்கள் அனீஷ், ஹனீபா, சந்தீப் ரெட்டி, பாலகிருஷ்ணன், ஜெயவேல், அழகேசன், ஜெயகுமார், செல்வகுமார் ஆகியோரை கடுமையாக காவல்துறை தாக்கியதுடன், போலீஸ் வாகனத்தில் ஏற்றி, எங்கும் நிறுத்தாமல் வாகனத்திற்குள் வைத்தே லத்தியாலும், துப்பாக்கியாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரிவிக்காத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இதர தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளரை தனியாக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். எதற்காக காவல்துறை இத்தகைய தாக்குதலை வாலிபர்கள் மீது தொடுத்துள்ளது. மாவட்டச் செயலாளரை ஏன் தனியாக அழைத்து சென்றது? என்ற விவரம் தெரியாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே. வனஜகுமாரி, ஆர்.வெள்ளைச்சாமி, ஜி.செல்வா, எஸ்.குமார், எம்.குமார், வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா மற்றும் மாதர், ஆட்டோ, மாணவர் சங்கத் தோழர்கள் உள்ளிட்டு 200க்கும் அதிகமானோர், வாலிபர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்திற்கு சென்றுள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 9 தோழர்கள் எங்கே உள்ளனர், அவர்களை நாங்கள் பார்க்க வேண்டும் என்று உதவி ஆணையர் கோவிந்தராஜூ-விடம் கேட்டுள்ளனர். காவல்துறையினர் 9 பேர் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்காமல் செய்தி அறிய சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளது.

அச்சமயம் எங்கோ இருந்து 4 வாகனங்களில் காவலர்களுடன் வந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் நட்ராஜ் மற்றும் போலீசார் அனைவரும் காட்டுமிராண்டித் தனமாக அங்கு திரண்டிருந்த வாலிபர், மாணவர், இயக்கத்தினர் மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், அருகமை கடைகளில் இருந்தவர்களையும் இழுத்துபோட்டு போலீசார் தாக்கியுள்ளனர். அரைகிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்களை விரட்டி விரட்டி போலீசார் தாக்கியுள்ளனர். அவ்வழியாக சென்ற வாகனங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினரே அடித்து நொறுக்கியுள்ளனர். எதற்காக காவல்துறையினர் வாகனத்தை, காவல்துறையினரே அடித்து உடைக்கின்றனர் என்று அங்கிருந்த சில பொதுமக்கள் வினவியபோது காவல்துறையினர் அவர்களையும் விரட்டியுள்ளனர்.

நிருபர் மீது தாக்குதல்

இச்செய்தியை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர், குறிப்பாக தீக்கதிர் நிருபரை போலீசார், பலவந்தமாக கேமிராவை பிடுங்கி குறிவைத்து தாக்கியுள்ளனர். காவல்துறை பிடுங்கிச் சென்ற கேமிராவை பத்திரிகையாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து இரவு 2.30 மணிக்கு கொடுத்துள்ளனர். கேமிராவில் இருந்த தடியடி சம்பந்தப்பட்ட புகைப்படங்களை அழித்துள்ளனர். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். இதனைச் செய்த காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

இந்த தாக்குதலில் போராட்டத்தில் பங்கேற்ற பலர் காயமுற்றுள்னர். காயமடைந்து மயங்கி கிடைந்தவர்களையும் போலீசார் சுற்றிநின்று காலால் உதைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  ஜி.செல்வாவின் மண்டையில் வலுவான தடியால் காவல்துறை தாக்கியதால், மண்டை உடைந்து படுகாயமுற்று ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான விக்னேஷ், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர்களான ராஜூ, தயாளன் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும்  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படாத நிலையில், பலர் தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மண்டபத்திற்குள் போலீஸ் காவலில் இருந்த இளம்பெண்கள், வாலிபர்கள், மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிலரையும் காவல்துறை சரமாரியாக தாக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமாரை கழிவறையில்  வைத்து மயங்கி விழும் வரை தாக்கியுள்ளனர். மயக்கமுற்ற அவரை மீண்டும் தண்ணிர் ஊற்றி மயக்கம் தெளிய வைத்து அடித்துள்ளனர். பெண்களை துடைப்பத்தால் அடித்துள்ளனர். தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். அனைவரயும் வரிசையாக நிற்க வைத்து அடித்ததோடு, முட்டி போட வைத்தும், தோப்புகரணம் போட வைத்தும் அடித்துள்ளனர். ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் பெண்களிடம் ஆபாசமாக பேசி, இப்படியா தொட்டார்கள், அப்படியா தொட்டர்கள் என்று பெண் போலீசார் இருக்கும்போதே தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். வாய்கூசும் வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இளைஞர்களின் உயிர்குறியில் லத்தியால் தாக்கியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத நிலையில், காவல்துறை தாக்கியது என்று நீதிபதியிடம் என்று எதுவும் சொல்லக்கூடாது, சொன்னால், கொன்று விடுவேன் என்று அச்சுறுத்தி 14 பேரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மக்கள் பிரச்சனைக்காக ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், மாணவர் சங்கத் தோழர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இந்த தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிக்கரணை காவல்துறை ஆய்வாளர் நட்ராஜ், உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 பேர் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதுடன், எவ்வித நிபந்தனையுமின்றி அனைவரையும் உடனடியாக  விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கண்ணகிநகர், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட காவல்நிலையங்களில், காவல்நிலையச் சாவுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அண்மையில் கண்ணகி நகரில் நடைபெற்ற லாக்-அப் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மனித உரிமை பிரிவு ஆய்வு செய்து, காவல்துறையினர்தான் கொலை செய்துள்ளனர் என்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தொடர்ந்து அந்த காவல்நிலையங்களில் நடைபெறும் லாக்-அப் மரணம் மனித உரிமை மீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடுவதை வன்மமாகக் கொண்டு இந்த தாக்குதலை காவல்துறை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

ஜனநாய ரீதியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தும் போது சமீப காலத்தில் காவல்துறையினர் இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. தமிழக அரசு ஜனநாயக ரீதியாக இயக்கம் நடத்துவோர் மீது இதுபோன்ற தாக்குதலை தொடுக்காமல் தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...