வாழையடி வாழையாக கம்யூனிஸ்ட்டுகள் குடும்பத்தோடு இயக்கத்தில் தொடர்வது தனிச்சிறப்பு!

தோழர் அ.ப. படத்திறப்பு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன்

திருப்பூர், நவ.21 ,

ஒருவர் கம்யூனிஸ்ட் ஊழியராக இருந்தால் அவரது குடும்பமே இயக்கத்தில் இணைந்து வாழையடி வாழையாக தொடர்வது தனிச்சிறப்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தோழர் அ.ப. என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் அ.பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ம் தேதி காலமானார். அதையொட்டி தோழர் அ.ப.வின் படத் திறப்புவிழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தோழர் அ.ப. உருவப் படத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். அத்துடன் அ.ப.வின் உடல் தானம் செய்யப்பட்டதற்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழையும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வழங்கினார். அ.ப.,வின் புதல்வர் செந்தில்குமார் – செ.ராஜாத்தி தம்பதியரின் ஆண் மகனுக்கு “செம்மலர்ச்செல்வன்” என்று அவர் பெயர் சூட்டினார். இத்துடன் இடுவாய் கிராமத்தில் கண் தானம் வழங்கிய கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் குடும்பத்தாருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சிறப்புரை:-

மனித வாழ்க்கை ஒரு முறைதான். அந்த வாழ்க்கையில் பிற்பாடு நாம் திரும்பிப் பார்க்கும்போது பயனின்றி வாழ்ந்தோம் என்று வருந்துவதாக இருக்கக் கூடாது. மனித குலத்துக்குப் பாடுபட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுத்தக் கூடியதாக அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மாமேதை லெனின் கூறுவார். அவரது கூற்றுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட் லட்சியத்தின் மீது அசைக்க முடியாத உறுதியோடு தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்ததுடன், தனது குடும்பத்தாரையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக வளர்த்தவர் தோழர் அ.ப., கம்யூனிஸ்டுகள் தங்கள் குடும்பத்தாரையும் இந்த இயக்கத்தோடு வாழையடி வாழையாகத் தொடர்ந்து இயங்கும்படி செயல்படுவர். 1950ம் ஆண்டு சேலம் சிறையில் காவேரியும், அவரது மகன் சேஷாசலமும் அடைக்கப்பட்டிருந்தனர். சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் மீது கொடிய அடக்குமுறையை ஏவி 22 கம்யூனிஸ்ட்டுகளை காவல் துறை சுட்டுக் கொன்றது. இதில் காவேரி உயிரிழந்தார். அதன் பிறகு சிறையை விட்டு விடுதலையானபோது அவரது மகன் சேஷாசலத்தின் உணர்வு எப்படி இருந்தது என்று நான் அவரிடமே கேட்டேன். உயிருள்ள வரையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு வெளியே வந்ததாகத் தெரிவித்தார். அந்த சேஷாசலம் 86 வயதாகி இப்போதும் திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர்களைப் போன்றவர்களால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் அசைக்க முடியாததாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

இன்றைக்கு மத்திய மோடி அரசு 500, 1000 பணத்தாள் செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தொழில், வர்த்தகம், மக்கள் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நவம்பர் 23 ஆம் தேதி திருப்பூரில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...