வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைப் பகுதிகளே காரணமென்ற அடிப்படையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் போன்ற நீர்நிலைகளின் ஓரங்களில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற பெயரில் அப்புறப்படுத்தி, சென்னையிலிருந்து 30-40 கி.மீ. வெளியே குடியமர்த்தும் பணியை செய்து வருகிறது.

2018 ஆம் ஆண்டின் ஜூலை மாதம், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு.கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு, கூவ நதியோரம் வசித்த 14,257 குடும்பங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கண்டறியப்பட்டு அவற்றின் 6,879 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மறுகுடியமர்த்தும் நடவடிக்கையை விமர்சித்தும், நதிக்கரையோரம் குடியிருந்த மக்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலேயே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை தொடர்ந்து நதிக்கரையோரமாக, நீர்வழித்தடங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி குடியிருந்து வந்த மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 59வது வட்டத்திற்குட்பட்ட கூவ நதிக்கரையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக சத்தியவாணிமுத்து நகர், இந்திராகாந்தி நகர், காந்தி நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் குடியமர்த்தி வருகின்றனர்.

2005ஆம் ஆண்டின் மே மாதத்தில் மேற்கண்ட பகுதிகளில் குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளின் மேற்கொண்ட கணக்கின்படி பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் 745 குடும்பங்களும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 2245 குடும்பங்களும், சத்தியவாணிமுத்து நகரில் 693 குடும்பங்களும் என மொத்தம் 3683 குடும்பங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டன.

மேற்படி 2005 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏதாவது காரணத்தை சொல்லி இப்பகுதி மக்களை சென்னைக்கு அப்பால் அரசாங்கம் குடியமர்த்தி வருகிறது. 2019 டிசம்பர் 12ஆம் தேதியிட்ட ஆவணத்தின்படி 1112 வீடுகள் மேற்கண்ட மக்களுக்காக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இத்தகைய குடியமர்வு நடவடிக்கைகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக பத்திரிகைகள் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே கரையோரத்தில் வசித்துவந்த மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டுக் கொடுக்க முடியாது என்று கடுமையாக போராடினார்கள். அன்றாடக் கூலிகளான அவர்களுக்கு அந்தக் கரையோரங்களில்தான் வாழ்வாதாரங்களும் இருந்தன. மீன் மார்க்கெட், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூலித் தொழிலாளர்களாகவும், பெண்கள் சாலையோரங்களில் இட்லி சுட்டு விற்பது என சிறு,சிறு முறைசாரா பணிகளில் தங்களது வயிற்றுப்பாட்டைச் சமாளித்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளும் அருகிலிருந்த அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றார்கள். நகருக்கு வெளியே மாற்று வீடுகளைக் கொடுத்தாலும், அங்கு தங்களுக்கான வாழ்வாதாரங்கள் கிடைக்காது. பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் அச்சமாக இருந்தது.

ஆனால், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ‘சென்னையை அழகுபடுத்தியே தீருவேன்’ என்று விடாப்பிடியாக அவர்களை வெளியே இழுத்துப் போட்டு ஆயிரக்கணக்கான வீடுகளுடன் அவர்களின் கனவுகளையும் தரைமட்டமாக்கியது அரசு இயந்திரம். இப்படியாக 54 குடிசைப் பகுதிகள் சென்னை நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இப்படியாய் குடிசைப்பகுதி மக்களை நகரிலிருந்து வெளியேற்றி பெரும்பாக்கம் பகுதியில் குடியமர்த்தும் திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உண்மையான பயனாளிகளுடன், போலி பயனாளிகளுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்து, கோடிகளில் ஆளும் கட்சிகள் கொழித்தன. உதாரணத்திற்கு, மகேஸ்வரி என்பவருக்கு பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவரது ஆதார் அட்டையின் நகல் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதார் அட்டையில், ‘496, நெடுஞ்செழியன் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை’ என்ற முகவரி இருக்கிறது. ஆனால், மகேஸ்வரியின் ஆதார் எண்ணை (8690 5342 8515) சோதித்துப் பார்த்தால், ‘பி.பி.கார்டன், அமைந்தகரை, சென்னை’ என்ற முகவரி வருகிறது. ஆதாரில் முகவரியை மட்டும் போலியாக மாற்றி, சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரையோரத்தில் வசிப்பவர் போல போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பெரும்பாக்கம் வீடு ஒதுக்கப்பட்டதில் ஏராளமான ஊழல் முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக ஜூனியர் விகடன் பத்திரிக்கை விலாவரியாக எழுதியது. 

இத்தகைய சூழலில், 2019 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் துணையோடு, சத்தியவாணிமுத்து நகர், இந்திராகாந்தி நகர், காந்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கத் தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதரன், பகுதிகுழு உறுப்பினர் குமார், கட்சிக்கிளை செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் மக்களை திரட்டி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைதம்பி காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

2019 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களோடு பேசி, தலைமைச் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலுக்கட்டாயமாக குடியிருப்புகள் அப்புறப்படுத்துவதை நிறுத்தக் கோரினார்.

அதனடிப்படையில், சில தினங்கள் வீடுகள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், மக்களின் விருப்பத்தின் பேரில் மறுகுடியமர்வு மேற்கொள்கிறோம் என சொல்லிக் கொண்டு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீடுகளை இடித்து அப்பகுதி மக்களை பெரும்பாக்கத்திற்கு குடிமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சூழலிலும், இத்தகைய வலுக்கட்டாய மறுகுடியமர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு, அருகாமையில் கட்டப்பட்டுள்ள கேசவப் பிள்ளை பூங்கா மற்றும் மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கிட கோரியும் 2020 நவம்பர் 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.  அப்பகுதியை சேர்ந்த 320 குடும்பங்கள் தனித்தனியே மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். மேற்கண்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் – 5-ன் மண்டல அலுவலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்.

இத்தகைய முறையீடுகள் மக்கள் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலில், அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை வலுக்கட்டாயமாக இடிக்கப் போவதாக வந்திருந்த தகவலின் அடிப்படையில் 2020 டிசம்பர் 8ஆம் தேதி இரவு குடிசைமாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஊரடங்கு உள்ள சூழலில், வலுக்கட்டாயமாக வீடுகளை இடிக்க வேண்டாம் என வலியுறுத்தி மின்னஞ்சல் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அனுப்பப்பட்டது.

ஆனால், அரசு திட்டமிட்டபடி 2020 டிசம்பர் 9ஆம் தேதி நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் உதவியோடு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அதிகாரி திருமிகு.கவிதா தலைமையில் வீடுகளை இடிக்க ஆரம்பித்தனர். பதறி போன சிலர் நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் ஓடிக் கொண்டிருக்கும் கூவம் ஆற்றில் இறங்கி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த போது, அதிகாரிகள் அம்மக்களோடு எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாமல் ஆற்றில் இறங்கியவர்களின் வீடுகளை முதலில் இடிக்க துவங்கினர். அன்றைய தினம், அனைத்து ஊடகங்களிலும் 14 பேர் கூவத்தில் நின்று போராடுகின்றனர் என செய்திகள் ஒளிபரப்பப்பட்ட போதும், அரசுத்துறையின் எந்த அதிகாரியும் இந்த மக்களோடு பேசவோ, ஆறுதல் தெரிவிக்கவோ எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடைசியில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையிலேயே மேற்கண்ட 14 பேரை கூவத்திலிருந்து வெளியே வரவழைக்க முடிந்தது. சுமார் 8 மணிநேரம் கழிவுநீர் ஓடுகின்ற கூவத்தில் இறங்கி நின்ற மக்களுக்கு எவ்வித முதலுதவி சிகிச்சையும் அளிப்பதற்கு அங்கிருந்த அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எவரும் முயலவில்லை.

தொடர்ந்து 2020 டிசம்பர் 10ஆம் தேதி குடியிருப்புகளை இடிப்பதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்ட போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஆகியோரிடம் நேரில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினரின் உதவியோடு வீடுகள் இடிக்கப்பட தொடங்கின. எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து இரவு விடுவித்தனர். அன்றிரவு எங்களது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழக துணை முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டுள்ளவர்களை சென்னைக்குள்ளே குடியமர்த்த கோரி வலியுறுத்தினார்.

மேற்கண்ட குடியிருப்புகள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை கோரி 2020 டிசம்பர் 10 அன்று தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தேசிய தலைவர் மற்றும் தமிழக இயக்குனர் (சென்னை) ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனு கட்சியின் சார்பில் அனுப்பப்பட்டது.

சத்தியவாணிமுத்து நகர், இந்திரா காந்தி நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு அருகாமையிலேயே கட்டப்பட்டுள்ள கேசவப் பிள்ளை பூங்கா மற்றும் மூலகொத்தளம் ராமதாஸ் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கிட கோரி சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 2020 டிசம்பர் 11ஆம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அவர்களை நேரடியாக சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, எங்களது கட்சியின் கேசவப் பிள்ளை பூங்கா கிளைச் செயலாளர் தோழர் நு.அன்பு அவர்கள் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோட்டம்-3, சென்னை-39 கடித எண்.ந.க.எண்.546/அ3/கோ.3/2020 நாள்.03.11.2020 நாளிட்ட கடிதத்தின்படி, “கேசவப் பிள்ளை பூங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகள் இதுவரை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இங்கு கட்டப்படும் குடியிருப்பு கூவம், பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தெரிவித்திருந்தது.

மேற்கண்ட குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் நிலைப்பாட்டிற்கேற்ப கூவக் கரையோரம் குடியிருந்த சத்தியவாணிமுத்து நகர், இந்திரா காந்தி நகர், காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு கேசவப் பிள்ளை பூங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கக் கோரி குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் அவர்களை 28.12.2020 அன்று நேரடியாக சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் 2020 நவம்பர் 4 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த 320 பேரில் பெரும்பாக்கம் குடியிருப்புக்கு செல்லாமல் கேவச பிள்ளை பூங்கா பகுதியில் உள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கக் கோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் 191 குடும்பங்களுக்காவது மேற்படி 1056 குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கக் கோரி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் 2020 டிசம்பர் 31ஆம் தேதி அன்று நேரடியாக சந்தித்து மனு கொடுத்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு விவாதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மேற்கண்ட மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாரிய அதிகாரிகளிடம் பேசியதில், கூவக் கரையோரம் பல ஆண்டுகளாக குடியிருந்த மக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் வெளியேற்றி பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் குடியமர்த்த, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (ஊhநnயேi சுiஎநச சுநளவடிசயவiடிn கூசரளவ- ஊசுசுகூ) தலா ஒரு குடியிருப்பிற்கு ரூ.65,000/- என்ற அடிப்படையில் வீடுகள் கட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு நிதி ஒப்படைத்து உள்ளதாக தெரிகிறது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி – மண்டலம் 5 – வட்டம் 59க்குட்பட்ட காந்திநகர் கூவம் ஆற்றுக்கரையோரம் குடியிருந்த 191 குடும்பங்களுக்கு – தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோட்டம்-3, சென்னை-39 கடித எண்.ந.க.எண்.546/அ3/ கோ.3/2020 நாள்.03.11.2020 அடிப்படையில் கேசவப் பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சி கோரும் போது, இக்குடியிருப்பு ஒன்றின் மதிப்பு சுமார் ரூ.5 1/2 லட்சமாக உள்ளது என குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை நதிநீர் மறுசீரமைப்பு அறக்கட்டளை ரூ.65,000/- மட்டுமே குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு செலுத்தியுள்ளதால் மீதி தொகையை ஊசுசுகூ அல்லது தனிநபர்கள் வாரியத்திற்கு செலுத்தினால், கேசவப் பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் மேற்படி வீடுகள் கோரும் மக்களுக்கு ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கண்ட நிதியை தனிப்பட்ட பயனாளிகளிடமிருந்து பெறுவதற்கு மாறாக ஊசுசுகூ-யிடம் அல்லது பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் அம்மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு கேசவப் பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்படி வீடுகள் கோரும் 191 குடும்பங்கள் மழையிலும், குளிரிலும் அந்தப் பகுதியிலேயே அவதிக்குள்ளாகி வரும் சூழலில், அவர்களுக்கு உடனே வீடுகளை ஒதுக்கிட வேண்டும் எனக் கேட்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களை 2021 ஜனவரி 6ஆம் தேதி நேரடியாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

கேசவப்பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்ட 1056 வீடுகளில் மேற்படி மக்களுக்கு வீடுகளை ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, 10 தினங்களுக்கு பிறகு தெரிவிப்பதாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 21.01.2021 அன்று மீண்டும் குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குனரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வி.கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது 2021 பிப்ரவரி 22ஆம் தேதி மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை சந்தித்து இதுகுறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்தார்.

2021 ஜனவரி 30 அன்று குடிசைப்பகுதி வாரிய மேலாண்மை இயக்குனரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால், தலைமைப் பொறியாளர் திருமிகு.சேதுபதி அவர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மற்றும் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, தலைமை பொறியாளர் அவர்கள், கே.பி.பார்க். திட்டப்பகுதி குடியிருப்புகளின் பணமதிப்பு அதிகமாக இருப்பதால் ஒதுக்க இயலாது என்றும், அதற்கு மாறாக, மணலி புதுநகர் குடியிருப்பு வீட்டின் மதிப்பு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் என்றும் அதில் ரூ.2 லட்சத்தை அரசு ஏற்றுக் கொண்டு மீதியுள்ள ரூ.1 1/2 ரூபாயை சம்பந்தபட்ட மக்கள் செலுத்தும்பட்சத்தில் அவர்களுக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

ஆனால், கே.கே.நகர் பகுதியில் சாலையோரத்தில் குடியிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.5,68,000/- செலுத்தி இதே கே.பி.பார்க் 1056 குடியிருப்புகளில் வீடுகளை பெற்றுக் கொள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியம் எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தி உள்ளது.

“கூவம், பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கென கட்டப்பட்ட கேசவப்பிள்ளை பூங்கா 1056 குடியிருப்புகளில், கூவக் கரையோர சத்தியவாணிமுத்து நகரில் வசித்த 191 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க மறுப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

சென்னை மாநகரத்திற்குள்ளேயே தலித் மக்களும் குடியிருப்பதற்கான வாழ்வாதார உரிமையை மறுத்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூவக் கரையோரம் குடியிருந்த மக்களுக்கு மறுக்கப்படும் அதே வீடுகளை மற்றவர்களுக்கு பணத்தின் அடிப்படையில் ஒதுக்குவதென எந்த அடிப்படையில் குடிசைப்பகுதி மாற்று வாரியம் முடிவெடுத்து செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும். குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் இத்தகைய செயல்பாடுகள், அது உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கக் கூடிய செயலாக அமைந்துவிடும்”  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 2021 பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.

தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் உள்ள  கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்தி, சென்னை மாநகரத்திற்குள்ளேயே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான வீடுகளை ஒதுக்குவதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக இப்போது சத்தியவாணிமுத்து நகரில் இருந்து கடைசி கட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என அப்புறப்படுத்தப்பட்ட 191 குடும்பங்களுக்காவது கேவசப்பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்து இம்மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். அதுவரையிலும் வாழ்விட உரிமைக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அப்பகுதி மக்களும் உறுதியுடன் முன்னெடுப்பார்கள்.

சென்னையின் பல இடங்களில் குடிசைப்பகுதிகளில் வசிப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு துரிதமாக முன்னெடுத்துள்ளது. இப்படியான சூழலில், சத்தியவாணிமுத்து நகர், இந்திராகாந்தி நகர், காந்தி நகர் மக்களுக்கான இப்போராட்டம் வெறுமனே அவர்களுக்கானது மட்டுமல்ல. சென்னை மாநகரின் உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாகும். மறுகுடியமர்வு என்ற பெயரில் சென்னைக்கு வெளியே விரட்டுவதற்கு எதிராகவும், உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் பரந்துவிரிய வேண்டிய தேவையுள்ளது. இரக்கமற்ற அரசு இயந்திரத்தை, ஊழல் அதிகாரிகளை எதிர்த்த இந்த போராட்டம், சென்னை மாநகர் முழுதும் பற்றி படர வேண்டியுள்ளது.

நகரத்திற்குள்ளேயே வாழும் உரிமைக்காக உலகெங்கும் நடக்கும் போராட்டங்களின் ஒருபகுதியாக இப்போராட்டம் மாறி வருகிறது. இதில் குரலற்றவர்களின் குரலாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் ஓங்கி ஒலிக்கும். எங்களோடு இணைந்திட அனைத்து ஜனநாயக சக்திகளையும் அக்கறையுடன் அழைக்கிறோம்.

சென்னை மாநகரம் உழைக்கும் மக்களுக்கானது!
உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் சென்னையை விட்டு விரட்டாதே!
சத்தியவாணிமுத்து நகர், இந்திராகாந்தி நகர், காந்தி நகர் மக்களுக்கு கே.பி.பார்க்-இல் உள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கீடு செய்!

வாழ்விட உரிமைக்கான போராட்டங்கள் ஓயாது!
ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்!!

Check Also

சமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்

சமூக நீதி சாசனம் – பதிவிறக்கம் செய்யDownload முன்னுரை தமிழக மக்கள் தொகையில் 20.01% பட்டியல் சாதியினர். இது தேசிய ...