விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமானம், வணிகம் உள்ளிட்ட அனைத்துமே ஸ்தம்பித்துள்ளன. பல லட்சம் மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துள்ளனர். மரணங்கள் மேலும் தொடரும் என அச்சம் நீடித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பது மட்டுமின்றி, உலகத்தை பிடித்தாட்டும் கொரோனா போன்ற கொள்ளை நோய்களையும் தடுக்க முடியாது என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.

சோசலிசமே மாற்று:

முதலாளித்துவத்தின் தலைவனாக விளங்குகிற அமெரிக்கா தன்னுடைய சொந்த மக்களையே கைவிட்டுவிட்ட நிலையில், சின்னஞ்சிறு நாடான கியூபா, உலக மக்கள் அனைவருக்கும் நேசக்கரம் நீட்டுகிறது. மக்கள் சீனம், வியட்நாம், வடகொரியா போன்ற நாடுகள் இன்றைய நெருக்கடியை எதிர்கொண்டு தீர்ப்பதில் புதிய வழியை காட்டுகின்றன. சோசலிசமே உண்மையான மாற்று, மற்றெல்லாம் வெறும் ஏமாற்று என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

பாஜக தலைமையிலான மதவெறி கார்ப்பரேட்மய அரசு மக்கள் மீதான அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இக்கொள்கைகளால் தொழில் வளர்ச்சி மங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம் அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன.

எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது போல கொரோனா தொற்று இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளது. 132 கோடி மக்களையும் வீடுகளில் முடக்கிப் போட்டுள்ளது. நோய்த் தடுப்புக்கோ, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கோ, நோய்த் தொற்றை கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்வதற்கோ மத்திய மோடி அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை. ஊரடங்கினைப் பிரகடனப்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கிப் போடுவது மட்டுமே பிரதமரின் செயலாக உள்ளது.

ஊரடங்கால் 14 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். புலம்பெயர்ந்த பல கோடித் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 6 கோடிக்கும் அதிகமான சிறு குறு தொழில்களும், அதில் பணியாற்றும் பல கோடித் தொழிலாளர்களும் எதிர்காலத்தை இழந்துள்ளனர்.

பசியோடும் 8 மணி நேர வேலை:

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாட உழைப்பாளிகள், வியாபாரிகள், நடுத்தர மக்கள் என அனைவரும் அடுத்த  வேளை உணவிற்கு வழியின்றித் தவிக்கின்றனர். இவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு மத்திய மோடி அரசு உரிய நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. மாநில அரசுகள் கோருகிற சிறப்பு நிதியினை கொடுக்க மறுப்பது மட்டுமின்றி, ஏற்கனவே வழங்க வேண்டிய நிதிப் பங்கீட்டினையும் அளிக்க மறுத்து வருகிறது. மொத்தத்தில் மக்களையும் மாநில அரசுகளையும் பட்டினியில் வதைத்து வருகிறது. அதேவேளை, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை என கருணை மழை பொழிகிறது.

8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதை முன்வைத்து நடந்த போராட்டங்களின் விளைச்சலே மே தினமாகும். ஆனால், இன்றைய நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு மத்தியில் ஆளும் மோடி அரசு தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக மாற்றிட எத்தனித்துள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும், நீர்த்துப் போக செய்யப்பட்டு வருகின்றன.

மக்கள் ஒற்றுமையை சிதைத்து தன்னுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தவே மோடி அரசு துடிக்கிறது. இந்தக் கொடூரமான கொரோனா காலத்தையும் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராக மாற்றுவதிலேயே இந்துத்துவா சக்திகள் முனைப்புக் காட்டுகின்றன. மாநில உரிமைகள், ஜனநாயக உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு, அதிகார குவிப்பு என்பது எதேச்சதிகாரத்தை நோக்கி நகர்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத ஒரு நாடாக இந்தியா மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி மத்திய ஆட்சியின் அடியொற்றியே செயல்படுகிறது. மத்திய அரசிடம் போராடி நிதி பெறுவதற்குப் பதிலாக தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினரின் வருவாயை சுருக்கவே வழி காணப்படுகிறது. கொரோனா பாதித்துள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்க மறுக்கும் நிலை உள்ளது.

பறிபோகும் பணிநிரந்தரம்:

தமிழகத்தில் நிரந்தரப் பணிகளில் கூட தொகுப்பூதிய ஒப்பந்தத் தொழிலாளர்களாக பல லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள், ஆசிரியர்கள், மருத்துவத்துறை என அனைத்துத் துறைகளிலும் பல லட்சம் பேர் பணி நிரந்தரமின்றி தவிக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் எட்டாயிரம் செவிலியர்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பல லட்சம் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே சுரண்டப்படுகின்றனர். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் தொழிற்சாலைகளிலும் பல லட்சம் தொழிலாளர்கள் அத்துக்கூலி ஆட்களாகவே உள்ள அக்கிரமம் தொடர்கிறது.

நாகரீகம் பற்றிய சவடால்களுக்கு மத்தியில் கையால் மலம் அள்ளும் கொடுமையும் தீண்டாமையும் சாதிய ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  இவர்களது பணி நிரந்தரம், உரிமைகளைப் பாதுகாக்க போராட்டங்களை முன்னெடுப்பதே மே தின சூளுரையாகும்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்:

நாட்டிலேயே முதன்முறையாக மே தினத்தை தமிழகத்தில் சென்னையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கொண்டாடிய பெருமை நமக்கு உண்டு. அப்பெருமையினை நிலைநிறுத்தும் வகையில் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை மேலும் வீரியத்துடன் முழங்குவோம்.

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை என்ற நம்பிக்கையோடு இந்த மே தினத்தில் மேம்பட்ட ஒரு உலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...