விடுதலைப் போராட்ட தியாகப் பரம்பரையினர் தேசத் துரோகிகளா?​ பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 1 –

வீரஞ்செறிந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தியாகப் பரம்பரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகப் போராடுவோரை தேச விரோதிகள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட 124 (ஏ) சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் செவ்வாயன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மிகப்பெருந்திரளானோர் கலந்து கொண்டு மத்திய மதவெறி பிடித்த மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசின் அடக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனப் பேருரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாவட்டத் தலைவர்களில் ஒருவரான மு.சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மட்டுமின்றி பெருந்திரளான பொது மக்களும் தலைவர்கள் உரையை கவனத்துடன் செவி மடுத்துக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...