விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்!

தோழர் க.கனகராஜ், விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டதற்கு கம்யூனிஸ்டுகள் பங்கேற்றார்களா? என்று ஆர்எஸ்எஸ் காரர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் விடுதலைப் போரில் பங்கேற்வில்லை என்பதை திசைதிருப்புவதற்காகவே இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இருப்பினும் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பை முகநூலில் மட்டும் பதிவிட்டுவிட முடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா, இரண்டாவது பொதுச் செயலாளர் இஎம்எஸ்.நம்பூதிரிபாட், மூன்றாவது பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய மூவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல ஆண்டுகள் சிறைச்சாலையில் கழித்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல, அன்று கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த ஒவ்வொருவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். தியாகம் செய்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு ஒரு துளியை இங்கு முன்வைக்கிறோம்.

அந்தப் பையனுக்கு அப்போது வயது 16. அது 1932 ஆம் ஆண்டு, கிராமத்தில் பிறந்த அந்த பையனுக்கு தான் பிறந்த தேதி தெரியாது. எனவே, தன்னுடைய பிறந்த தேதியை மார்ச் 23 என்று தன்னுடைய ஆவணங்களில் பதியச் செய்தான். அந்தத் தேதி நம்மில் பலருக்கு நினைவிருக்காது. அது பகத்சிங்கும் ராஜகுருவும் சுகதேவும் தூக்கிலிடப்பட்ட நாள். 1932 ஆம் மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தியாகிகளான முதலாம் ஆண்டு நினைவு நாள். அந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் ஹோஷியார்பூர் நீதிமன்றத்தின் மேலே உள்ள கொடிக் கம்பத்தில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்தார்கள். அன்றைய தினத்தில் கவர்னர் அந்த ஊருக்கு வருவதாகவும் இருந்தது. அந்த ஊர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே, மூவர்ணக் கொடியேற்றும் நிகழ்ச்சியை திட்டமிட்டவர்கள் கைவிட்டுவிட்டார்கள்.

அந்த 16 வயது பையனுக்கு கடுமையான கோபம். வயது மூத்தவர்களைக் கூட இதைச் செய்யாமல் கூட போராட்டம் நடத்தப் போகிறோமா என்று கேலி செய்தான். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்தவர் நீ வேண்டுமானால் அந்த மூவர்ணக் கொடியை ஏற்று என்று சபதமிட்டார். அந்த 16 வயது பையன் மூவர்ணக் கொடியையும் கம்மையும் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றான். யூனியன் ஜாக் கொடியை கழற்றிவிட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ராணுவம் அப்போது சுடத் தொடங்கியது. இரண்டு குண்டுகளைச் சுட்டுவிட்டார்கள். ஆனால் அந்த இரண்டு குண்டும் அவன் மீது படவில்லை. டெபுடி கமிசனராக இருந்த பகாலே தான் இதற்கு பொறுப்பு. அவர் மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்தார். குண்டுச் சத்தம் கேட்டதும், அறையிலிருந்து வெளியே பார்த்தவர் சிறுவனை நோக்கிச் சுடுவதை நிறுத்தச் செய்தார். அந்த சிறுவனை கைது செய்தார்கள். அவன் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோசமிட்டான்.

வசதிகளற்ற இருட்டுச் சிறைக்குள் அவனைத் தள்ளி அடைத்தார்கள். அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அவனுடைய பெயர் என்னவென்று அவனிடம் கேட்டார்கள். எனது பெயர் லண்டன் டோர்சிங் (லண்டனைத் தகர்க்கும் சிங்) என்று சொன்னான். அவன் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை. மன்னிப்புக் கேட்கவும் மறுத்துவிட்டான். மூவர்ணக் கொடியை ஏற்றியதையும் ஒப்புக் கொண்டான். அதோடு பகத்சிங்கை புகழ்ந்து பேசினான். இவற்றிற்காகவெல்லாம் அவனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மிக அலட்சியமாக ஓராண்டுதானா என்று கேட்டான். நீதிபதிக்கு கோபம். நான்காண்டு தண்டனை என்று தண்டனையை அதிகப்படுத்தினார். அவ்வளவுதான என்று மீண்டும் கேட்டான். அதற்கு மேல் அவர் அந்தப் பையன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு தண்டனை அளிக்க சட்டத்தில் இடமில்லை.

அவனை டெல்லியிலிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு வெவ்வேறு காரணங்களுக்காக சிறைபட்டிருந்த சிறுவர்களையெல்லாம் தேசபக்தர்களாக மாற்றும் பணியை அவன் செவ்வனே செய்தான். வேறு வழியின்றி சிறை நிர்வாகம் அவனை லாகூரிலிருந்த போர்ஸ்ட்டல் சிறைக்கு மாற்றியது. 1934 ஆம் ஆண்டு இரண்டு வருடத்திற்குப் பின்பு அந்தச் சிறுவன் விடுதலை செய்யப்பட்டான் (தண்டனை நான்காண்டுகள் என்றபோதும்).

அதன் பின்பும் அவனுடைய விடுதலை வேட்கை குறைந்துவிடவில்லை. காவல்துறை அவனை தேடிக் கொண்டே இருந்தது. திருமணம் முடிந்து உடனடியாக அவன் கைது செய்யப்பட்டான். வெகுநாட்களுக்குப் பின்னர்தான் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனுடைய மனைவிக்குக் கூட இவன்தான் உன் கணவன் மற்றவர்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அளவிற்குத்தான் அவர்களுக்குள் அறிமுகம் இருந்தது.

This slideshow requires JavaScript.

அந்த லண்டன் டோர்சிங்தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித். தனது குடும்ப சொத்திலிருந்து கிடைத்த ரூபாய் 20 லட்சத்திலிருந்து 10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நலனுக்கும் வழங்கினார் தோழர் சுர்ஜித்.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...