விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் : பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல் !

கோவை செட்டிவீதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.

கோவை செட்டிவீதி செல்வசிந்தாமணி குளம் அருகே கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு உள்ளது. ஞாயிறன்று இந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. முதல் தரை தளத்தில் இருந்த மூவர் பாதுகாப்பாக வெளியேறினர். முதல் தளத்தில் இருந்த வனஜா, அவரது மகள் கவிதா, மருமகள் சுவேதா, மற்றும் பேரன் தன்வீர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் இக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் பக்கத்தில் உள்ள ஓட்டு வீடும் இடிந்து சேதமடைந்தது. இதில் கஸ்தூரி (60), கோபால் (70) ஆகிய வயதான தம்பதியினர் மற்றும் அவரது மகன் மணிகண்டன்(35), மற்றொரு தனி அறையில் தங்கியிருந்த மனோஜ்(45) என மொத்தம் 8 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதில் வனஜா மற்றும் கவிதா மீட்கபட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். மேலும் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கிய தன்வீர் என்ற 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பின்னர் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மனோஜ் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். ஸ்வேதா என்ற 27 வயது பெண் மற்றும் கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். திங்களன்று காலை மணிகண்டன் (35) மீட்கப்பட்டார். இதில் கஸ்தூரிம்மாள்(70) மீட்கும் பணியை தீயனைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விபத்து செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இடிந்து விழுந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

முன்னதாக திங்களன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன் நகரக்குழு உறுப்பினர்கள் பி.கே.சுகுமாறன், சந்திரன், ராதா மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து உள்ளிட்ட தலைவர்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். விபத்து நடந்தவுடன் உடனடியாக கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய உயிர்களை பாதுகாக்க துரித கதியில் இயங்கி மூன்று உயிர்களை பாதுகாத்த இளைஞர் ஈஸ்வரமூர்த்திக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி பாராட்டு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், குளத்தை அழகு படுத்த குளக்கரையை பலப்படுத்தும்போது அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளின் ஸ்தரத்தன்மையை அறிந்து அதற்கேற்ப பணிகளை துவக்க வேண்டும். ஆனால் இங்கே அதற்கான ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. இந்த குளக்கரையை அழகு படுத்த கோவை மாநகராட்சி பெரிய பெரிய பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொள்கிறபோது இங்குள்ள வீடுகள் அதிர்வுக்குள்ளாவதை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். குடியிருப்பிற்கு மேற்குபுறம் குளத்தையொட்டி 2010 ஆண்டு 60 அடி திட்டசாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இங்கு சாலை அமைத்திருந்தால் சாலையை அடுத்தே குளக்கரை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கும். இதன்படி நடந்திருந்தால் இத்தகைய விபத்தே ஏற்பட்டிருக்காது. தற்போது குடியிருப்பையொட்டி குளத்தை அழகு படுத்தும் பணி மேற்கொண்டதுதான் விபத்துக்கு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். தற்போது உடனடியாக வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு தாற்காலிகமாக தங்குவதற்கு உரிய ஏற்படுகளை அரசு செய்துதர வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு தர வேண்டும். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து இதற்க்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது குளக்கரையையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் ஸ்திரதண்மையை அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோல சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் விபத்துக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்தனர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...