விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.

தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாகி விட்டது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே 2017ம் ஆண்டு திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இதுபோல புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் கூட தஞ்சாவூர் அருகே வல்லத்தில் வங்கி கிளை அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.

இத்தனை உயிரிழப்பு சம்பவங்கள் நடந்த பிறகும், இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்து வரும் அக்கறையற்ற போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தச்சுத் தொழிலாளி மோகன் குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி கும்பல் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், கந்துவட்டி பற்றி தரப்படும் புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கந்துவட்டி தடுப்புச் சட்டம் (2003)-ஐ தீவிரமாக அமல்படுத்திட வேண்டுமெனவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...