விழுப்புரம் சேஷசமுத்திரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி மக்களின் மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலமும், தேரோட்டமும், பொதுப்பாதை வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் பகுதி மக்கள் குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. மின்மாற்றியை உடைத்து மின்விநியோகத்தை தடை செய்து, பெட்ரோல் குண்டுகள் மூலம் சாமி தேரும், குடியிருப்புகளும் கொளுத்தப்பட்டுள்ளன. பல வீடுகள், தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தக் கொடிய சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தலித் மக்களின் சாமி ஊர்வலம், தேரோட்டம் பொதுப்பாதை வழியாக செல்லக்கூடாது என மற்றொரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2012ம் ஆண்டு முதல் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறவில்லை. 2015 ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து 16-8-15 அன்று தேர்த்திருவிழா நடத்துவது என்று செய்யப்பட்ட முடிவின் படியே திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்த்திருவிழாவை தடுக்கும் நோக்கத்துடன் சில சாதிவெறி பிடித்த தலித் விரோத சக்திகள் தலித் மக்களின் குடியிருப்புகள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி தேர்த்திருவிழாவையும், தேரோட்டத்தையும் தடுத்துள்ளனர். திருவிழாவிற்கு முந்தைய நாளன்று கள்ளக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தே இந்த தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் சேஷசமுத்தரத்தில் நடைபெற்றுள்ளதென தெரிய வருகிறது.

சேஷசமுத்திரம் பகுதியில் தற்போதுள்ள பதட்டமான நிலைமையை தணிக்கவும், அங்குள்ள தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழகத்திலுள்ள சுமார் 1 கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதி பேர் தலித் மக்கள். மறுபாதி பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள். அரசியல் ஆதாயத்திற்காக இவர்களிடையே மோதலை உருவாக்கிட சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே, இரு சமூகத்தினரிடையே சகஜ நிலைமையை ஏற்படுத்திட தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டுள்ள தலித் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், புதிய வீடுகள் அமைத்துக் கொள்வதற்கான நிதி உதவி வழங்குவதோடு, விழுப்புரம் மாவட்ட ஆட்சி நிர்வாகம் முன்னின்று தடைப்பட்டுள்ள தேர்த்திருவிழா நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்திடவும், அப்பாவி பொதுமக்களை கைது செய்வதை தவிர்த்து, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...