விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்

டெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அடையாளமான டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

அரசின் சார்பில் நடைபெற இருக்கும் குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு விவசாயிகள் தேசியக்கொடியுடன் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அறிவித்துள்ளனர். இதனை ஏற்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பெங்களூரிலும் டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. இதற்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உத்திரவிட்டுள்ளது சரியல்ல என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் நாளை (ஜனவரி 26) அமைதியாக நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பதுடன், உரிய பாதுகாப்பும் வழங்கிட  வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று ...