விவசாயிகளுக்கு நிவாரணமளிக்காத ஆளுநர் உரை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!

தமிழக ஆளுநர் உரை  இதுவரை செயல்படுத்தி வரும் திட்டங்கள், வகுத்துள்ள கொள்கைகள் சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளதோடு புதிய வரவேற்கத்தக்க சில அறிவிப்புகளையும் கொண்டதாக உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது. பொதுவிநியோகத் திட்டம், உரமானியம் போன்றவற்றில் நல உதவிகளை பணமாக மாற்றி வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் அரசு கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்திருப்பதும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதும், மத்திய அரசின் 2012-ஆம் ஆண்டு வரைவு தேசிய நீர்க் கொள்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்க அம்சங்கள். கொள்கை அளவிலான இந்த எதிர்ப்புகளோடு  வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்காமல் தடுக்கவும், தண்ணீருக்கு விலை வைப்பதை நிராகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும்.

சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சநாட்டில் புதிய தேயிலைத் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பது, 15 கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் அருகில் தேயிலைத் தொகுப்பு பொது சேவை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, குடிசைகளில் வசிப்போருக்கு 2775 குடியிருப்புக்களை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பது, சுனாமி குடியிருப்புக்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை பராமரிக்க 30.69 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, நாகப்பட்டிணத்தில் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பது, நில ஆவண மேலாண்மை அமைப்பை உருவாக்குவோம் என்று அறிவித்திருப்பது, சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வழங்கி வரும் பராமரிப்புத் தொகை உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது ஆகியவற்றை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.
 
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்கிற உறுதி மொழியே மீண்டும் ஆளுநர் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து தற்கொலைச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. ஆய்வுக்குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் டெல்டா மாவட்டம் முழுவதையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிப்பதோடு, தமிழகத்தில் இதர மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அறிவித்து நிவாரணங்களை வழங்க வேண்டும்.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சாதி மோதல்களும், தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், நேர்மையான காவல்துறை அதிகாரி ஒருவரே சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும், வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதும், கூலிப்படைகளின் செயல்பாடும் இதை உறுதிபடுத்துகின்றன. எனவே,  ஆளுநர் உரையில் சமூக விரோத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருப்பது சரியான மதிப்பீடல்ல. விவசாயத்தில் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 5 சதவிகித வளர்ச்சியை எட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்கான போதுமான திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், விவசாய நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்படும் நிலையில் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் நிலப் பயன்பாட்டு கொள்கையை உருவாக்குவது குறித்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆளுநர் உரையில் தொழிலாளர்கள் கோரிக்கைகள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பகுதியினரின் கோரிக்கைகள், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமையை பாதுகாப்பது, தொழிற்சங்க சட்டம் போன்ற தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கான அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
 
பொது மருத்துவத்தை மேம்படுத்துவது,  அனைவருக்கும் சமச்சீரான தரமான கல்வி கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவது, நகர் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது, மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, தொகுப்பு வீடுகள் சீரமைப்பது, நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்கள் நலன் சார்ந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்க வேண்டும், இவை தமிழக மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகள்.
 
மத்திய அரசின் நவீன, தாராளமய  கொள்கைகள் பலவற்றை தமிழக அரசு எதிர்த்துள்ளது. எனவே, தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023 அதற்கு இயைந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
 
ஆளுநர் உரையிலுள்ள புதிய அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த நிதி நிலை அறிக்கையில் உரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டுமென்றும், உரையில் கவனம் செலுத்தப்படாத மேலே கண்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்திடவும், தமிழக மக்களின் உடனடியான தேவைகளை நிறைவேற்றிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply