விவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்!

மத்திய மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளது வாழ்வை நாசமாக்கும் வகையிலும், வேளாண்மையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றியது.

இதேபோல போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை அதிரடியாக நிறைவேற்றி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ந் தேதி நாடு தழுவிய வரலாறு காணாத வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நவம்பர் 27ந் தேதி டில்லியில் மோடி அரசை முற்றுகையிட பல லட்சம் விவசாயிகள் சாரை, சாரையாக அணிதிரண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்களை டில்லிக்குள் நுழைய விடாமல் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தை பயன்படுத்தி தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

அரசே நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை வெட்டியும், பல கட்ட தடுப்புகளையும் உருவாக்கியும் போக்குவரத்தை தடை செய்த போதிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வை பாதுகாப்பதற்கு உயிர் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். டில்லி சாலைகளில் 80 கி.மீ. நீளத்திற்கு விவசாயிகள் அமர்ந்து வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வஞ்சகமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என அறிவித்துள்ளனர். நியாயமான இப்போராட்டத்திற்கு எதிர்கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் நிறைவேற்றி தமிழக விவசாயிகளுக்கு சவக்குழி தோண்டியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. மோடி அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களை மட்டுமின்றி அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களை கிழித்தெறிந்தால் மட்டுமே தமிழக விவசாயிகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

எனவே, மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசும் நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை ரத்து செய்யும் போராட்டத்தில் தமிழக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தலைநகரை உலுக்கும் வீரமிக்க போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மத்திய அரசின் அடக்குமுறைகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்திடவும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்துப் பகுதி பொதுமக்களும் நெடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும், அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் வேண்டுகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...