விவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, அரசம்பட்டுவைச் சேர்ந்த தோழர் எம். சின்னப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (01.01.2021) இரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் எம். சின்னப்பா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் சங்கத்துடன் அறிமுகம் ஏற்பட்டு சங்கத்தில் செயல்பட ஆரம்பித்தவர். தோழர் விபிசியால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சென்னையில் படிப்பு முடித்துவிட்டு ஊர் திரும்பிய அவர் இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தையும் கட்டுவதற்கு அரும்பாடுபட்டவர். கல்வராயன் மலைவாழ் மக்களை திரட்டியதிலும் குறிப்பிட்ட பணியாற்றியவர். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், வி.ச. மாவட்ட செயலாளராகவும், மாவட்டம் பிரிந்த பிறகு விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோரை திரட்டி அவர்களின் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்தியவர். தற்போது இம்மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் பலமான அமைப்பாக இருப்பதற்கு இவரின் பங்கு மகத்தானது. அதேபோல, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அவர் வசிக்கும் ஊர் அருகில் உள்ள கொசப்பாடி என்ற கிராமத்தில் தலித் மக்களை திரட்டி ஆழைய நுழைவு போராட்டம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று இக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டியவர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உருவாவதற்கு இவருடைய பங்கு முக்கியமானது. அச்சங்கத்தின் தலைவர், துணை நிர்வாகி, பொருளாளர் என பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குநராக உள்ளார். மாணவர்-இளைஞர் அமைப்புகள், கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தோழர் சின்னப்பா மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி தோழர் கண்ணகி அவர்களுக்கும், மகள்களான சுபா, சுதா, அம்பிகா, காயத்திரி மற்றும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...