விவசாயிகள் மீது தமிழக போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்!

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (14.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெண்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளது. திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி உள்பட அனைவரையும் கீழே தள்ளி பின்னர் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. பல இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்காத வரை உணவு உட்கொள்ள மாட்டோம் என உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மீது கண்மூடித் தனமான தாக்குதல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுதில்லியில் 19 நாட்களாக விவசாயிகள் நகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் ஒவ்வொரு இடங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து, உழவர் பெருமக்களை சமூக விரோதிகளைப் போல கேவலமாக நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

இத்தகைய அடக்குமுறை மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடமாக்கி விட நினைத்தால் அது ஆட்சியாளர்களின் பகல் கனவாகவே முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...