மறியல் செய்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி சிபிஐ(எம்), சிபிஐ கட்சிகள் கண்டனம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டுமென தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்திய பிறகும், கர்நாடக அரசு பிடிவாதமாக மேகதாதுவில் அணை கட்டுவோம் என அறிவித்துள்ளது. இப்பின்னணியில், விவசாய சங்கங்களின் சார்பில் இன்று டெல்டா மாவட்டங்களில் ரெயில் மற்றும் தபால் தந்தி அலுவலகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்தியும் கர்நாடக அரசை கண்டித்தும் இன்று நடைபெற்ற மறியலில் நாகை மாவட்டத்தில் நாகை நகரத்தில் காவல்துறையினர் மறியல் செய்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகைய்யனை காவல்துறையினர் கீழே தள்ளிவிட்டு மற்றவர்கள் மீது தடியடி நடத்தியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜா, மற்றும் திருமருகல் விவசாய சங்க தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தமிழரசன் மற்றும் பலர் காயமுற்றுள்ளனர்.

இதைப்போலவே தஞ்சை நகரத்திலும் மறியல் செய்யச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். நாகை நகரத்தில் மற்றும் தஞ்சையில் காவல்துறையினரின் தடியடி மற்றும் அத்துமீறிய செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறோம்.

           இரா.முத்தரசன்                             ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர் – சிபிஐ        மாநிலச் செயலாளர் -சிபிஐ(எம்)

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...