விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் விவசாயத்திற்கென்று 2/12ம் ஆண்டு கடன் பெற்றுள்ளார். முறையாக பணத்தை செலுத்தியதால் 2017ம் ஆண்டு மீண்டும் 1.5 லட்சம் அதே வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கொரானா நோய்த்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடநத் நான்கு மாதங்களாக தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், வங்கியின் சார்பில் கடன் வசூலிக்கும் ரவுடி கும்பல் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்று தவணையை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியதுடன் அவமரியாதையாக ஏசியுள்ளனர்.

இதனால் அவமானம் தாங்காமல் மருந்து குடித்து விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்த பிறகும் வங்கி அதிகாரிகள் அரசு உத்தரவை மீறி கடனை கட்ட வற்புறுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

வங்கி கடன் வசூலுக்கு தனியார் முகவர்களை பயன்படுத்துவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதே தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. கடன் வாங்கிய விவசாயிகளை, மாணவர்களை அவமானப்படுத்துவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கையில் இந்த குண்டர்படை ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வங்கி கடன் தவணை வசூலிப்பதற்கு தனியார் முகவர்களை பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

மரணமடைந்துள்ள ராஜாமணி அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன், அவர் வங்கியில் பெற்றுள்ள மொத்த கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்றகு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...