விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 27 வயது நிரம்பிய விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறது.

அவர் கடந்த 18 ஆம் தேதி காலை போக்குவரத்துக் காவலர் ஒருவர் ஆசிரியரை தாக்கியதால் சாலை மறியல் போராட்டம் செய்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர் பத்து பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தற்கொலைக்கும், கோகுல்ராஜ் மரணம் குறித்த விசாரணைக்கும் தொடர்பில்லை எனவும், எனது சாவை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் எழுதி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொள்பவர் இவ்வாறு எழுதி வைப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன? இவரது மரணம் குறித்து வலுவான சந்தேகங்களும் எழுந்துள்ளன. இப்பின்னணியில், அவரது மர்மமான மரணம் குறித்து உண்மை நிலை கண்டறிய இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...