வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே தமிழகத்திற்கு திரும்ப அழைத்துவர வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்: வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே தமிழகத்திற்கு திரும்ப அழைத்துவர வலியுறுத்துவது தொடர்பாக ….


தமிழகத்திலிருந்து பணி நிமித்தமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் அந்தந்த நாடுகளிலேயே சிக்கித் தவித்து வருகின்றார்கள். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு குடியரசு, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கிலான தொழிலாளர்களும், ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான மாணவர்களும் தமிழகம் திரும்புவதற்காக அனுமதி வேண்டி காத்திருக்கின்றனர்.

கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும் இவர்களை மீட்பதில் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் இவ்விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களை தமிழகம் அழைத்து வரவும், நேரடியாக தமிழக விமான நிலையங்களுக்கு அவர்கள் வந்து சேரும் வகையிலும் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

தமிழக அரசு வெளியிடும் செய்திக் குறிப்புகளில், அதிகமாக நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தாயகம் திரும்புவோரை காரணமாக அரசு குறிப்பிடுகிறது. இதில் உண்மை இல்லை. தமிழகத்தில் நேற்று வரை (11-6-2020) நோய்த் தொற்றுக்கு ஆளான 38 ஆயிரத்து 716 பேர்களில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நோய்த் தொற்றுடன் திரும்பியவர்கள் 1923 பேர் மட்டுமே. நோய்த் தொற்றுக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை குற்றம் சுமத்தும் மனநிலையே நமது சொந்த மக்களை திரும்ப அழைப்பதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு காரணமாக கருத வேண்டியுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவோர் நோய் பாதிப்புடன் வந்தாலும் அவர்களால் கொரோனா நோய் உள்ளூரில் பரவுவதை தடுப்பது மிக எளிது. அரசால் அவர்களுக்கென நோய் கட்டுப்பாட்டுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்த முடியும். அவர்களது நோய்த்தொற்றை கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணமடைந்த பின்னர் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், வெளி நாட்டு தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு ஆகும் செலவை சில நிறுவனங்கள் அவர்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, இக்கால கட்டத்தில் எப்படியேனும் ஊர் திரும்ப வேண்டும், நெருக்கடியான இச்சூழலில் தாய் மண்ணில், சொந்த ஊரில் குடும்பத்தாரோடு இருக்க வேண்டும் என்கிற நமது வெளிநாடு வாழ் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அரசு இப்பிரச்சனையில் விரைந்து செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்,

தங்கள் அன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...