வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய ஆய்வுக்குழுவிற்கு அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!

இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்ததராசன் எம்.எல்.., இன்று (28.11.2015) பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை;


28.11.2015

வெள்ள சேதத்தைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும் வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்திக்காமல் சென்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கனமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சென்னை நகரமும் இதனால் கடுமையான நாச நஷ்டத்திற்கு உள்ளானது.

தாழ்வான பகுதிகளிலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும், குடிசைப்பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் பெரும் பாதிப்பிற்காளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் துணிமணிகள், படுக்கை, தொலைக்காட்சி பெட்டிகள், மேசை மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டி, பண்ட பாத்திரங்கள், ரேசன்கார்டுகள், சான்றிதழ்கள் போன்றவை நாசமாகி விட்டன. இந்த இழப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு வடசென்னையில் முதலமைச்சர் தொகுதியில் மட்டும் இரண்டு தெருக்களை பார்வையிட்டு விட்டு பக்கத்து மாவட்டத்திற்குப் போய் விட்டது. ஆய்வுக்குழு வடசென்னையில் அரைமணி நேரம் கூட செலவழிக்கவில்லை, கடுமையாக பாதிக்கப்பட்ட பெரம்பூர் தொகுதிக்குள் வரவே இல்லை. ஒருவாரம் வெள்ளத்தில் மிதந்த வில்லிவாக்கம், சிட்கோ ஆகிய பகுதிகளுக்குக் கூட போகவில்லை. இந்தக்குழு வடசென்னையை பார்வையிடவே இல்லை என்பது தான் உண்மை.

சட்டமன்ற உறுப்பினரான என் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. அவர்களை சந்திக்க இந்த ஆய்வுக்குழு அக்கறை காட்டவில்லை. இந்தக் குழுவினால் சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது. ஆய்வு என்பது சம்பிரதாயத்திற்காகவே நடத்தப்பட்டுள்ளது.

வெள்ள நீர் வெளியேறிய பிறகும் கழிவு நீர் சூழ்ந்த நிலையிலேயே சென்னை மக்கள் வாழ நேர்ந்தது. உடல்நலக் கேட்டினால் மருத்துவச் செலவிற்காகவே மக்கள் பெருந்தொகையை செலவழித்துள்ளனர்.

ஆய்வுக்குழுவின் அலட்சியப் போக்கை கண்டிப்பதோடு, மத்திய அரசு மாநில அரசு கோரியுள்ள தொகையை வழங்க வேண்டுமெனவும், மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

.சவுந்தரராசன் எம்.எல்..,

சட்டமன்றக்குழுத் தலைவர் சிபிஐ (எம்),

பெரம்பூர் தொகுதி

Check Also

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு ...