வெள்ளச் சேத நிவாரணங்கள் முறைகேடின்றி, முழுமையாக அரசாணைப் படி நிவாரணம் வழங்கிட கடிதம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.., நேற்று (29.11.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு “வெள்ள சேதம் பாதிப்புகள் கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் முறைப்படுத்தல் அரசாணைப்படி வழங்குதல் முறைகேடுகள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தி” கடிதம் அனுப்பியுள்ளார்.

28.12.2015

பெறுநர்

மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- வெள்ள சேதம் பாதிப்புகள் கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் முறைப்படுத்தல் அரசாணைப்படி வழங்குதல் முறைகேடுகள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக.

—–

சமீபத்தில் வெள்ளத்தால் கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சிதம்பரம் பகுதியில் நிவாரணம் வழங்குவதில் பெரும் குறைபாடு ஏறபட்டு மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், தொகுப்பு வீடுகள், அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள், ஒட்டு மற்றும் ஓட்டு வீடுகள் அனைத்துக்கும் நிவாரணம் மறுக்கப்பட்டு மிக குறைந்த அளவு எண்ணிக்கை வீடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளார்கள்.

இது தொடர்பாக வருவாய்த்துறை ழு.டீ.ஆளு.சூடி. 380 நாள் 27-10-2015 அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கிட பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதை தங்களது கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 1. இந்த அரசாணைப்படி நீர் சூழ்ந்த வீடுகளுக்கும், துணிமணிகளை இழந்த குடும்பத்தினருக்கும் தலா ரூ.1800/-ம், வீட்டு சாமான்கள் இழந்தவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2000/-ம் மொத்தம் ரூ.3,800/- வழங்கிட வேண்டும். இந்த வகையில் பெரும் பகுதியானவர்கள் நிவாரணம் பெற தகுதி படைத்தவர்கள். இந்த வகையில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் யாருக்கும் வழங்கவில்லை.
 2. வேலை மற்றும் வாழ்வாதாரம் இழந்த ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.60/-ம், ஒரு குழந்தைக்கு ரூ.45/-ம் வழங்கிட வேண்டும். இந்த உதவி 60 நாள் முதல் 90 நாட்கள் வரை வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி உழைப்பாளிகள் இன்றுவரை வேலைக்கு செல்லவில்லை. வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளிகளுக்கு குடும்பத்துக்கு தலா ரூ.5000/- இழப்பீடு அளிக்க வேண்டும். சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளை புதுப்பிக்கும் வகையில் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஆனால் மேற்கண்ட விதிப்படி நிவாரணம் வழங்கப்படவில்லை.
 3. அனைத்து குடிசைகள், தொகுப்பு வீடுகள், அரசுதிட்டங்களினால் கட்டிக் கொடுத்துள்ள வீடுகள், ஓட்டு வீடுகள், ஒட்டு வீடுகள் ஆகிய வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டு சாமான்கள் இழந்த அனைவருக்கும் தலா ரூ.5000 /- வழங்க வேண்டும்.
 4. முகாம்களில் தங்க வைக்கப்பட்டமக்களுக்கு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, புடவை, ஒரு லிட்டர் மண்ணெண்ணை, ரூ.1000/- நிவாரணம் வழங்கிட வேண்டும். இத்தகைய உதவிகளும் யாருக்கும் வழங்கப்படவில்லை.
 5. வீடுகள்

() முழுதும் சேதமடைந்த வீடுகள் ரூ.95,100/- வழங்கிட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கவில்லை.

() பகுதி சேதமடைந்த கல்வீடுகள்ரூ.5,200/- வழங்கிட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் கல்வீடுகளுக்கு நிவாரணமே வழங்க முடியாது என அதிகாரிகள் பிடிவாதம் செய்கிறார்கள். மேற்கண்ட அரசாணையை யாரும் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதாக தெரிகிறது.

() முழு சேதமடைந்த குடிசைகளுக்கும் பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கும் முறையே தலா ரூ.5000/- , ரூ.4100/-ம், 10 கிலோ அரிசியும் வழங்கிட வேண்டுமென அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கிய இடங்களில் 10 கிலோ அரிசி வழங்கப்படவில்லை. அதையும் வழங்கிட வேண்டும்.

மேற்கண்ட தொகையினை கொண்டு குடிசையினை புனரமைக்க முடியாது. எனவே, இத்தொகையினை முறையே ரூ.25,000/- , ரூ.20,000 என உயர்த்தி வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

() மாட்டுக் கொட்டகைக்கு ரூ.2,100/- வழங்கிட வேண்டும் என்பது நிறைவேறவில்லை.

5. விவசாய பயிர்கள்:

நெல், மணிலா, மரவள்ளி, சவுக்கு, முந்திரி, அரும்பு, காய்கறிகள், கரும்பு உள்ளிட்ட சாகுபடிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதல்ல. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் நிவாரணத்தையும் அதற்கேற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும். வறட்சி பாதித்த போது 2013ம் ஆண்டு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.15,000/- நிவாரணம் வழங்கியது என்பதை தங்களது கவனத்துக்க தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லுக்கு ஹெகடேருக்கு ரூ.13,500/- என்பதை ஏக்கருக்கு ரூ.25,000/-, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.25,000/- கரும்பு, சவுக்கு, வாழை பயிர்களுக்கு ரூ.1.50 லட்சம் (ஏக்கருக்கு) அரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.25,000/- நிவாரணமாக வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து வயல்களும் விடுபடாமல் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கிட வேண்டும். அரசாணைக்கு புறம்பான பல விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

 • வழங்கப்பட்டுள்ள பயிர்கடன்களை ரத்து செய்திட வேண்டும்.
 • தவணை தவறியது என்பதால் நகைகளை வங்கியில் ஏலம் போடுவது நிறுத்தப்பட வேண்டும்.
 • பயிர் காப்பீடு பெற்றிட அனைத்து நிலங்களுக்கும் அரசே பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்திட வேண்டும்.

6. கால்நடைகள் இறப்பு:

இறந்த கால்நடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி மாட்டுக்கு ரூ.50,000-மும், ஆடுக்கு ரூ.10 ஆயிரமும், கோழிக்கு ரூ.500ம் வழங்கிட வேண்டும்.

பிரேத பிரசோதனை செய்தால் மட்டுமே நிவாரண தொகை வழங்கிட முடியம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அரசாணையில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை. வெள்ளத்தின் போது பிரேத பரிசோதனை சாத்தியப்படவில்லை என்பதால் இறந்த கால்நடைகளை கணக்கிலெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

7. இறந்தவர்களுக்கு இழப்பீடு : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எப்ஐஆர் இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்க முடியும் என வற்புறுத்தப்படுகிறது. மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடையாலும், தீபாவளி பண்டிகையாலும் சிலர் பிரேத பரிசோதனை செய்யாமல் உடல அடக்கம் செய்துள்ளார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளது. இதுவரைக்கும் நிவாரணம் வழங்காதது அவர்களது குடும்பத்தினருக்கு வேதனையாக உள்ளது.

இத்தகைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கோரி பல கட்ட போராட்டங்களில் அன்றாடம் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட உரிய அறிவுரைகளை மாவட்ட அதிகாரிகளுக்கு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களது வீடுகளை கணக்கெடுப்பு நடத்துவதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழும்பியுள்ளன. சில கிராமங்களில் மாடி வீடுகள் உள்ளிட்ட அதிகமான வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேசமயம் பல ஊராட்சிகளில் ஒற்றை இலக்க அளவில் மட்டுமே கணக்கெடுக்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு நிவாரணமும், அதேசமயம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய முறைகேடுகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நிவாரண உதவிகள் வழங்கப்படும் பயனாளிகள் பட்டியல் பகிரங்கமாக வெளியிப்படுவதில்லை. இது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என்பதை கவனப்படுத்துகிறேன்.

 • நிவாரண உதவிகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளது வங்கி கணக்கில் டெபாசிட் செய்திட வேண்டும். பணமாக நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வழங்கப்படும் தொகை முழுமையாக பயனாளிகளை சென்றடையும். (இப்போது வழங்கப்படும் தொகையில் ஒரு பகுதி பிடித்துக் கொள்ளப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்).
 • நிவாரணம் பெரும் பயனாளிகள் பட்டியலை மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்படுவதுடன், அப்பட்டியலை ஊராட்சி மன்றம் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.

நிவாரணம் வழங்குவதில் வெளிப்படை தன்மையுடன் இருந்தால் மட்டுமே உண்மையாக பாதித்தவர்களுக்கு நிவாரணம் முழுமையாக சென்றடையும் என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்

கே. பாலகிருஷ்ணன் எம்.எல்..,

சிதம்பரம் தொகுதி.

நகல்

 1. உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள், தமிழ்நாடு அரசு, சென்னை 600 009.
 2. உயர்திரு முதன்மைச் செயலாளர் அவர்கள், வருவாய் நிர்வாகம்,தமிழ்நாடு அரசு, சென்னை 600 009.
 3. உயர்திரு முதன்மைச் செயலாளர் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், தமிழ்நாடு அரசு, சென்னை 600 009. முகாம் : கடலூர் 607 002
 4. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், கடலூர் மாவட்டம், கடலூர் 607 002.

Check Also

அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ...