வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை துல்லியமாக ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த பிஐ(எம்) வலியுறுத்தல்

18.11.2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (18-11-15) பத்திரிகையாளர்களை சந்தித்த போது வழங்கப்படட செய்திக்குறிப்பு;

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் தாமரைச்செல்வன், செல்லப்பன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மணிவாசகம் ஆகியோருடன் நானும் சென்று நேற்று (17-11-2015) பார்வையிட்டோம். பெரம்பூர் தொகுதி உள்ளிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசனும், மதுரவாயல் தொகுதி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். இதைப்போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டார்கள். எல்லா மாவட்டங்களிலும் எங்கள் கட்சியின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னை மாநகரம் அதனை சுற்றியுள்ள புறநகர்ப்பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சென்னையில் பெரம்பூர், புளியந்தோப்பு, கொளத்தூர், திருவொற்றியூர், புத்தகரம், சூரப்பேடு, அம்பத்தூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகள், நீர்வழிக்கரையோர குடியிருப்புகள் மற்றும் குடிசைமாற்று வாரிய தரைதளப்பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க, உணவு வழங்க மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி போதுமானதல்ல. துரிதப்படுத்திட வேண்டும்.

சென்னை நகரில் தேங்கிய மழைநீரையும், கழிவு நீரையும் வெளியேற்ற போதுமான வழிகள் இல்லாததால், இரண்டும் கலந்து சாலைகளில் தேங்கி நிற்கிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சாலைகளில் குளோரின் பவுடர்கள் தெளிப்பது, நோய்தடுப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், கடலூர் ஆகிய பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டங்களின் மற்ற பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பரவணாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரம் வட்டத்தில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. வீடுகளும் சேதமடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுவரையில் 53 பேர் வெள்ளத்தால் இறந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் அடக்கம் செய்துள்ளதால், அரசு நிர்வாகம் இறந்தவர்களின் எண்ணிக்கையை 38 என்று குறைத்துக் கூறுகிறது. சுமார் 25 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும், 50 ஆயிரம் வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், பல்லாயிரம் வீடுகளில் வெள்ளம் உட்புகுந்து பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாடுகள், கோழிகள் இறந்துள்ளன. பல கோழிப்பண்ணைகள் முற்றிலுமாக நாசமடைந்துள்ளது. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலோர கிராமங்களில் படகுகள் சேதமடைந்துள்ளன. கைநெசவு உள்ளிட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அரசு நிர்வாகத்தின் கணக்குப்படி 29 ஏரிகள் உடைந்துள்ளன. சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

–           விவசாய சாகுபடி குறித்து முறையான கணக்கெடுப்பு செய்து நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000/- வீதமும், இதர பயிர்களுக்கு உரிய நஷ்டஈடும் முழுமையாக உடனடியாக வழங்கிட வேண்டும்.

–           முழுமையாக இடிந்த வீடுகளுக்கு ரூ.25,000/-, சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.15,000/-, வெள்ள நீர் புகுந்த வீடுகளுக்கு ரூ. 10,000/- வழங்கிட வேண்டும்.

–           மாடு ஒன்றுக்கு ரூ.50,000/-, ஆடு, பன்றி தலா ஒன்றுக்கு ரூ. 10,000/-, ஒரு கோழிக்கு ரூ.500/- வழங்கிட வேண்டும்.

–           உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00,000/- வழங்கிட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பரிசீலிக்கிறபோது கடலூர் மாவட்டம் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, மத்திய அரசிடமும் நிதி கோரி பெற வேண்டும். மத்திய அரசும் வேடிக்கை பார்க்காமல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில அரசு 500 கோடி ரூபாய் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மிதக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம் (ஏற்காடு) போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கணக்கிலெடுத்தால் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தால் 10 பேர் இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. அந்த குடும்பங்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதைப்போலவே விசூர் கிராமத்தில் வெள்ளத்தால் 4 பேர் இறந்துள்ளனர். வெள்ளவாரி ஆறு ஊருக்குள் புகுந்து பல வீடுகள் சேதமடைந்ததோடு நிலங்கள் மண்ணால் மூடப்பட்டு சுமார் 1000 ஏக்கர் பயிர் நாசமடைந்துள்ளது. நிலங்கள், சாகுபடிக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

மேற்கண்ட இரண்டு கிராமங்களிலும் 2010ம் ஆண்டு நவம்பர் 3வது வாரத்தில் தற்போது ஏற்பட்டதுபோல் வெள்ளம் அடித்து பெருத்த சேதம் ஏற்பட்டது. “விழுப்புரம் மாவட்டம் கு.கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், நைனங்குப்பம், பாளைக்கொல்லை பகுதியில் பெய்த மழைநீர் நரிஓடை வழியாகவும், காட்டுக்கூடலூர், வீரசிங்கன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், முடப்பள்ளி பகுதியில் உற்பத்தியாகும் காட்டாறு வெள்ள நீரும் சேர்ந்ததால் விசூர், செம்மேடு, ஏரிப்பாளையம் உள்ளிட்ட கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் வயல்கள் நீழில் மூழ்கியுள்ளன.”

தரைப்பாலம் சேதம்: பெரியகாட்டுப்பாளையம்-மேல்காட்டுப்பாளையம்-மேலிருப்பு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம், மண் சாலையும் வெள்ளிக்கிழமை இரவு வந்த காட்டாறு வெள்ளத்தால் சேதம் அடைந்தது. மேல்காட்டுப்பாளையத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் இரு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. காட்டாறு வெள்ளம் ஏற்பட்டால் இக்கிராம மக்கள் வெளியேறவோ, உள்செல்லவோ முடியாது. இதனால் அவசர கால உதவி கூட பெறமுடியாத சூழல் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்”.

            “பெரியக்காட்டுப்பாளையம் கிராமத்தில் பெரியக்காட்டுப்பாளையம் காலனி, அருந்ததி காலனி என இரு காலனிகள் உள்ளன. சுமார் 70 குடும்பங்களை சேர்ந்த இவர்களுக்கு ஓடையின் ஓரம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. கடந்த இருநாள்களாக பெய்த மழையால் வெள்ளிக்கிழமை இரவு திடீர் என ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரவு தங்கியதாக தெரியவருகிறது”.

            இதுகுறித்து காலனி மக்கள் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் காட்டாறு வெள்ளம் திடீர் என வருவதால் வீட்டினுள் தண்ணீர் ஏறி விடுகிறது. மேலும் வெளியில் உள்ள பொருள்களை அடித்துச் சென்று விடுகிறது. எனவே இப்பாதிப்பில் இருந்து எங்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.” – 2010 நவ 28, தினமணி நாளிதழ்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகாட்டுப்பாளையம் கிராமமும், விசூர் கிராமமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கிய பிறகு குறிப்பாக, வானிலை ஆராய்ச்சி நிலையம், நவம்பர் மாதத்தில் பெருமழை பெய்யும், புயல் வரும் என எச்சரிக்கைவிடுத்திருந்தது. அதனடிப்படையில் மாநில அரசு 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை கணக்கிலெடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பெரியகாட்டுப்பாளையும், விசூரிலும், கடலூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் உயிர்சேதம் உள்ளிட்டு பாதிப்பை தவிர்த்திருக்க முடியும் அல்லது குறைத்திருக்க முடியும். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இயற்கை சீற்றம் மட்டுமல்ல மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது.

தற்போது, 10 இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களும், பல அமைச்சர்களும் கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு எவ்வளவு வழங்குவது என கொடநாட்டில் இருந்தபடியே முதலமைச்சர் அறிவித்தார். வானிலை ஆராய்ச்சி மையம் மழை வெள்ளம் குறித்து எச்சரித்த உடன் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், முதலமைச்சர் அனுப்பி இருந்தால் வெள்ள பாதிப்பை குறைத்திருக்க முடியும்.

கடலூர் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வு செய்து எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பாதிப்பை தடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகள் ஆழப்படுத்தப்படாமல், கரைகள் பலப்படுத்தாமல் உள்ளதும் உடைப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆறுகள், ஓடைகள் தூர்வாரப்பட்டு கரைகளை பலப்படுத்தி இருந்தால் ஆற்றின் சீற்றம் குறைந்திருக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை துல்லியமாக ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வற்புறுத்துகிறது.

 

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...