வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக! மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துக!

கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 09-11-2011 அன்று சென்னையில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. மாநிலச்செயலாளர்   ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி, உ.வாசுகி, மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :-

1. வெள்ள நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துக!

சமீபத்தில் பெய்துள்ள பருவமழையால் தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் இன்னும் காணவில்லை. திருப்பூர் ஈரோட்டில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் – நெற்பயிர்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துளளன. மழை, மின்னல், இடி தாக்குதலால் வீடுகள் – மின்சாதனங்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பு மட்டுமன்றி, மேலும் மழை தொடரும்போது – வெள்ள சேதமும ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு – வெள்ள நிவாரணப்பணிகளை துவக்கிட வேண்டுமென தமிழக அரசை கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

பயிர் இழப்புகள், கால்நடைகள், வீடு இழப்புகள், இடி, மின்னல் தாக்குதல் மற்றும் சேதாரம் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.  அழிந்து போயுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.15,000, மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ற வகையில் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

மழைக் காலங்களில் ஏற்படும் மழை நீரை தேக்கி வைப்பதற்கு ஏரிகள்- நீர்நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளும், முறையான வடிகால் ஏற்பாடுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாலும், இப்பணிக்கு ஒதுக்கப்படும் தொகையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளாலும் – ஒவ்வொரு ஆண்டும் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. இதனால் நகரங்களிலும், கிராமங்களிலும் போக்குவரத்து பாதிப்பு- குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிப்பது- குடிநீர் விநியோகம் பாதிப்பு, நோய்நொடிகள் பரவுவது போன்ற காரணங்களால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகுகிறார்கள்.

எனவே, தமிழக அரசு நிரந்தரமாக வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, வடிகால்களை தூர்வாரி பராமரிப்பது போன்ற பணிகளை துவக்கிட வேண்டுமென  மாநில செயற்குழு தமிழக அரசை  கேட்டுக் கொள்கிறது.

2. மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துக!

மக்கள் நலப் பணியாளர்கள் 13000 பேரை கூண்டோடு பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பலன்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் தி.மு.க. அரசு 1990 ல் 25000 மக்கள் நலப் பணியாளர்களை நியமனம் செய்தது. ஆனால் அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அவர்கள் அனைவரையும் ஒரே அடியாகப் பணி நீக்கம் செய்தது. அதன் பின்னர் மீண்டும் தி.மு.க. அரசு வந்தவுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டு அவர்கள் சுமார் 5 ஆண்டு காலம் பணியாற்றிய பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களுக்கு பணிவழங்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் 2011 தேர்தலில் ஆட்சிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு 8.11.2001ல் பிறப்பித்துள்ள அரசு ஆணை மூலம் தற்போது பணியில் உள்ள 13000 மக்கள் பணியாளர்கள்  அனைவரையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதனை கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இதனால் மக்கள் நலப்பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் இதுவரை கிடைத்து வந்த சிறிய வருமானத்தையும் இழந்து வாடும் அவலநிலைக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக குறைந்த ஊதியத்தில் வறிய நிலையில் வாழும் மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்வது தவறான நடைமுறை ஆகும். தேவையெனில் அவர்களது பணிகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே பணி நீக்க  அரசாணையை ரத்து செய்து, 13,000  மக்கள் பணியாளர்களையும் மீள்ப்பணியிலிமர்த்துமாறு கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.

3. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக !

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமே°வரம் விசைப்பணி மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டிக்கடலில்  மூழ்கடித்துள்ளனர். தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் அவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இலங்கைக் கடற்படையின் கப்பலைக்கொண்டு மீன்பிடி படகின்மீது மோதியதில் படகு பெருஞ்சேதம் அடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைக்கடற்படையினர் மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததின் விளைவாகவே இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்கிறது. எனவே, தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும்  மத்திய, மாநில அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply