வேகப்படுத்தப்படும் தனியார்மயம் வேலையின்மையை மேலும் அதிகப்படுத்தும்!

ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொருளாதாரம்: உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்

வறட்சியை முன்கூட்டியே எச்சரித்திடும் அமைப்பு, வறட்சியை கண்காணித்திடும் அமைப்பு ஆகியவற்றின் கூற்றின்படி, 2019 இல், நாட்டில் 43.4 சதவீதத்திற்கும் மேலான பகுதிகள் வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு, பருவமழை பொய்த்தது பிரதான காரணமாகும். வடகிழக்குப் பருவ மழை, 2018இல் 44 சதவீத அளவிற்குக் குறைவாகப் பெய்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பருவகாலங்களுக்கு முன்பாகப் பெய்திடும் மழை யின் அளவும் (அதாவது, 2019 மார்ச் 1 இலிருந்து மே 31க்குள் பெய்திடும் மழையின் அளவும்), கடந்த 65 ஆண்டுகளில் மிகமிகக் குறைவாக இருந்தது. மத்திய நீர் ஆணையத்தின் கூற்றின்படி, இந்தியாவில் உள்ள 91 பெரிய நீர்த்தேக்க அணைகளில் 2019 மே 30 அன்று அவற்றின் கொள்ளளவில் 20 சதவீதம் அளவிற்குத்தான் நீர்வரத்து இருந்திருக்கிறது. அந்த அளவிற்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளின் சராசரி நீர்வரத்து அளவைவிட இது குறைவாகும். இதைவிட மிகவும் மோசமான அளவில் தென்மேற்குப் பருவமழையும் இப்போது பொய்த்துள்ளது. நாட்டிள் மொத்த மழையின் அளவில் 80 சதவீதம் தென்மேற்குப் பருவமழையின் மூலம்தான் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது தாமதமாகி இருக்கிறது, இந்த ஆண்டு இயல்பாகப் பெய்திடும் மழையின் அளவைவிட மழை, குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களுடன் கலந்தா லோசனை செய்து, குறிப்பாக இத்தகைய வறட்சி நிலையைச் சமாளித்திடவும், பொதுவாக ஆழமாகிக் கொண்டிருக்கும் விவசாய நெருக்கடியைச் சமாளித்திடவும், போர்க்கால அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

வேலையில்லாத் திண்டாட்டம்

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்ததன் காரணமாக, வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள், அரசாங்கத்தால் வெளியிடப்படாமல் மூட்டைகட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை இப்போதாவது வெளியிட வேண்டும். அதன்மூலம், நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்கிற உண்மையை நாட்டு மக்களுக்கு அறிவித்திட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிட வேண்டும். அது வரையிலும் வேலை கோரி பதிவு செய்திருக்கிற அனைவருக்கும் வேலையில்லாக் காலத்திற்கான நிவாரணத் தொகை அளித்திட வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தொகை அவர்கள் தங்கள் ஜீவாதாரமான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

தனியார்மயம்

அரசாங்கம், மிகப்பெரிய அளவில் தனியார்மயத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும். இது வீட்டிலுள்ள பாத்திரங்களை விற்று, தினசரிக் குடும்பச் செலவுகளை செய்வது போன்றதாகும். லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடக் கூடாது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்க ளைப் பொறுத்தவரை அவற்றைச் சரிசெய்து லாபகரமாக இயக்குவதற்கான முயற்சிகளைச் செய்திட வேண்டும். நாட்டையும், நாட்டு மக்களின் ஒற்றுமையையும் பின்னிப் பிணைத்து நிற்கும் ரயில்வே துறையில் பல பிரிவுகளை மிகப்பெரிய அளவில் தனியாருக்குத் தாரைவார்த்திடத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

தொழிலாளர் நலச்சட்டங்கள்

தொழிலாளர் நலச்சட்டங்களை, தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதற்கேற்ற விதத்தில் மிகவும் தீவிரமான முறையில் மாற்றங்களைச் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும். இந்தியத் தொழிலாளி வர்க்கம், தங்களுடைய உரிமைகளைப் போராட்டங்கள் மூலமாக வென்றெடுத்து, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அவற்றைச் சட்டபூர்வமானதாக மாற்றியிருக்கிறது. இவ்வுரிமைகள் அனைத்தும் நம் அரசமைப்புச் சட்டத்திலும் சட்டங்கள் மூலமும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய உரிமைகளை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எப்படி இருப்பினும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம்

நாட்டின் பொருளாதார நிலைமை, பல பகுதிகளில், ஸ்தம்பித்திருக்கிறது மற்றும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இது, ஏற்கனவே அதிக பொருளாதாரச் சுமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் வதைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு, உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதனை, நம் நாட்டிற்குத் தேவையான பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதற்கு, பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலமாகவே செய்திட முடியும். அரசாங்கம் இந்தத் திசைவழியில் உடனடியாகத் திட்டங்களைத் தீட்டிட வேண்டும்.

தரவுகளின் நம்பகத்தன்மை

அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் தரவுகளின் நம்பகத்தன்மை மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது. நாட்டின் சர்வதேசத் தரத்தினை நிலைநிறுத்திடவும், உண்மையில் எதார்த்த நிலையைத் தெரிந்து கொள்வதற்கும் இவற்றைச் சரிசெய்யக்கூடிய விதத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

அரசாங்கத்தின் சார்பில் அளிக்கப்படும் புள்ளிவிவரங்கள் மீது நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் மீண்டும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில், அரசாங்கம் ஒரு குழுவை/ஆணையத்தை அமைத்து, தரவுகளை அளவிடும் விதத்தை மாற்றியமைத்திட வேண்டியது அவசியமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலுக்குப் பின்பு, இந்த அரசாங்கம், ‘அனைவருடனும், அனைவருக்காகவும், அனைத்துத் தரப்பினருடனும் விசுவாசமாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். இதனை இந்த அரசு மிகவும் ஆழமான முறையில் பின்பற்றும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. எனினும், கடந்த ஐந்தாண்டு கால அனுபவம், இந்த அரசு இதனைப் பின்பற்றிடும் என்று விதத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.

‘பசுப் பாதுகாப்புக்குழு’ என்ற பெயரிலும், ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்ற பெயரிலும், இதுபோன்று பல்வேறு பெயர்களிலும் தனியார் குண்டர் படையினர் அதிகரித்து வருவதும் அவர்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பிரிவினரை மிகவும் பெரிய அளவில் கொல்வதும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குண்டர் படையினரால் பலர் கொல்லப்படுவது அதிகரித்து வரும் செய்திகளால் திகிலடைந்த உச்ச நீதிமன்றம், இக் குண்டர் கும்பல்களுக்கு எதிராக தனிச் சட்டம் நிறைவேற்றுமாறு அரசாங்கங்கத்திற்கு அறிவுரை வழங்கி இருந்தது.

எனினும், அரசாங்கம் இதனைச் செய்திடவில்லை. இத்த கையதொரு சட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த அரசு நிறைவேற்றிட முன்வர வேண்டும். மக்கள் மத்தியில் வெறுப்பு (hatred), சகிப்பின்மை, அச்சுறுத்தல் மற்றும் அச்சம் முதலானவற்றைப் பரவச் செய்வது கறாராக தடுக்கப்பட வேண்டும்.

நம்நாட்டில் பல்வேறு மக்கள் மத்தியிலும் காணப்படும் வேற்றுமைப் பண்புகளிடையே இழையோடும் அன்புப் பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திட முடியுமே தவிர, அவர்களிடையே மத ரீதியாக, மொழி ரீதியாக மற்றும் பல பன்மைத்தன்மையின் வடிவங்களில் மீது ஒரே சீரான தன்மையைத் திணிப்பதன் மூலமாக செய்திட முடியாது என்று நாங்கள் அடிக்கோடிட்டுத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகையப் புரிந்துணர்வை இந்த அரசு பின்பற்றும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிட்டுள்ள ஒரு பொருளின்படி நம் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில் புதியதோர் இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்கு இது மிகவும் அவசியமாகும்.

சமூக மேம்பாடு

நாட்டின் முன்பு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்ற மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவினை இந்த அரசாங்கம் நிறைவேற்றி சட்டமாக்கிட வேண்டும். மேலும் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் சம்பந்தமாக உள்ள சட்டங்களை வலுப்படுத்திட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமேயொழிய, அவற்றை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக, தனியார் துறையிலும் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடுகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும்.

நாடாளுமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த…

இந்திய அரசமைப்புச்சட்டம், மக்களின் இறையாண்மையின் மையக்கருவை வரையறுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையானது, “இந்திய மக்களாகிய, நாம்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, “இந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே இதன் மூலமாக இயற்றி, சட்டமாக்கி, அளித்திருக்கிறோம்,” என்று மிகவும் தெள்ளத் தெளிவாக வரையறுத்திருக்கிறது.

மக்கள் தங்கள் இறையாண்மையை, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகச் செயல்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்குத் தங்கள் செயல்பாடுகள் குறித்துப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப் பின் ஆட்சியில் அமர்கிறவர்கள், அல்லது, அரசாங்கத்தினர் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப் பின் ஆட்சியில் அமர்கிறவர்கள், அல்லது, அரசாங்கத்தினர் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். எனவே, நாடாளுமன்றம் என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவ தற்கான, கேந்திரமான இணைப்புச் சங்கிலியாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படைக்கூறு என்பது அது அடிக்கடி கூடுவதை உத்தரவாதப்படுத்துவதேயாகும். இந்திய நாடாளுமன்றம் ஆண்டில் நூறு நாட்களுக்குக் குறையாது கூட வேண்டும் என்றும் அதனை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் சட்டமியற்ற வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே கூறிவருகின்ற முன்மொழிவை இப்போதும் தொடர்கிறது.

புத்தாண்டு துவங்குவதற்கு முன்பே, நாடாளுமன்றத்தின் அமர்வுகள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட வேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய அளவில் நாடாளுமன்றத்திற்கு வருவதையும், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் உத்தரவாதப்படுத்திடும்.

மேலும் இது, பிரதமர், அல்லது, இதர அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் அது தொடர்பாக வெளிநாட்டிலிருந்து உயர் அதிகாரிகள் வருகை முதலானவை நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பங்கம் விளைவிக்காத விதத்தில் அமைவதையும் உத்தரவாதப்படுத்திடும். நடப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள், நாடாளுமன்ற விதிகளின் கீழ் கறாராகச் செயல்படுகின்றன என்பதையும், நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அதிகாரிகள் நாடாளுமன்ற நடப்பு விதிப் புத்தகத்தை உன்னிப்பாகப் பின்பற்று றார்கள் என்பதையும், அவர்கள் இவற்றுக்கு மாறாக சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதையும் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

ஒரு சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவா, இல்லையா என்று தீர்மானித்திடும் பொறுப்பு தற்சமயம் அரசமைப்புச் சட்டத்தின் 110(3) ஆவது பிரிவின் கீழ், மக்களவை சபாநாயகர் வசம் உள்ளது. ஒரு சட்ட முன்வடிவினை ‘நிதிச் சட்டமுன்வடிவாகக்’ கருதுவதா, கூடாதா என்பதற்கான தகுதித் தேர்வை அரசமைப்புச் சட்டத்தின் 110(1) மற்றும் 110(2) ஆகிய பிரிவுகள் தெள்ளத்தெளிவாக வரையறுத்திருக்கின்றன. இவ்வாறான 110(1) மற்றும் 110(2) பிரிவுகளைக் கண்டுகொள்ளாது, 110(3) பிரிவை மட்டுமே தன்னிச்சையாகச் செயல்படுத்த முனைவது நிறுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால், இதற்காக ஓர் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

பொது முக்கியத்துவம் மற்றும் சட்டங்கள் சம்பந்தப்பட்ட சங்கதிகள் குறித்து தீர்மானிப்பதில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமே சமமான அளவில் பங்கும் பொறுப்பும் இருக்கிறது. நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகள்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கூட்டத் தொடர்களில் பங்கேற்ப தற்கும் மேலாக, நாடாளுமன்றக் குழுக்களில் கணிசமான அளவிற்கு வேலைகள் இருக்கின்றன. அவற்றில் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படும் சட்டமுன்வடிவுகளின் முன்மொழிவுகளை உன்னிப்பாக ஆய்வு செய்திடுவார்கள்.

சட்டமுன்வடிவுகளை இறுதிப்படுத்துவதற்கு முன்பு, இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் குழுக்களின் முன் அளித்திடும் பரிந்துரைகள்/ஆலோசனைகளும் கணக்கில் கொள்ளப்படும். சமீப காலங்களில், இவ்வாறான குழுக்களின் செயல்பாடுகள் பலவீனமடைந்திருக்கின்றன. இதனை எவ்வளவு விரைவாகச் சரிசெய்திட முடியுமோ அவ்வளவு விரைவாகச் சரி செய்திட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

புல்வாமா/பாலக்கோடு நிகழ்வுகளுக்குப் பின்னர், பயங்கர வாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது தொடர்வது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், குறைந்தபட்சம் நான்கு நிகழ்வுகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், சுமார் நூறு பேர் காயங்கள் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. காஷ்மீர் மக்கள் தனிமைப்பட்டிருப்பது குறித்து மிகவும் கவலையோடு பரிசீலித்திட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்திட வேண்டும். ஜனநாயக நடைமுறையில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இது ஒரு முக்கியமான வழியாக இருந்திடும். நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அங்கே நடத்துவதற்கு ஒரு சுமுகமான சூழ்நிலைகள் இருந்த அதே சமயத்தில், அங்கே ஏன் சட்டமன்றத் தேர்தலை நடத்தவில்லை என்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு தினம்

முந்தைய அரசாங்கம், இதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்காக ஒரு குழுவை அமைத்திருந்தது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்வு என்றும் இதனை முறையாகக் கொண்டாடிட வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம். இதற்காக அமைக்கப்பட்டிருந்த முந்தைய குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இது தொடர்பாக ஆலோசனைகளையும் /கருத்துக்களையும் அளிப்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்திடும்.

விருப்புத்தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களின் வளர்ச்சி

இதற்காக நிதி ஆயோக் நிறுவனம் 115 மாவட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறது. முன்பு “பிற்பட்ட” மாவட்டங்கள் என்று கூறப்பட்டவை கூட இவற்றில் அடங்கும். இம்மாவட்டங்களில் ஐந்து முக்கிய அம்சங்களைப் பூர்த்தி செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், நிதி நிலைமையை மேம்படுத்துதல், திறமைகளை வளர்த்தெடுத்தல் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களுடன் ஆலோசனை செய்து மத்திய மாநிலத் திட்டங்களை ஒருங்கிணைத்திட வேண்டும். அதேபோன்று, மேற்கண்ட அம்சத்திற்கும் ஒதுக்கப்படும் மதிப்பீட்டுத் தொகை குறித்தும் மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, ஒரு கருத்தொற்றுமைக்கு வந்திட வேண்டும். விருப்பத்தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டம் அல்லது அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு செயல்படும் அதிகாரத்தை ஜனநாயக ரீதியாகப் பரவலாக்கிட வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசே நேரடியாக மேற்பார்வையிடுகிறது. இது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிரான செயலாகும். மாநில அரசுகளை ஓரங்கட்டும் நடவடிக்கையாகும். எனவே இதனை ஏற்க முடியாது. இத்திட்டத்தின் கீழ், நிதி ஆயோக்கினால் வேளாண்மைக்கும், நீர் வள ஆதாரங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் மதிப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாகும் என்றே நாங்கள் பார்க்கிறோம். திறன் மேம்பாடு (skill development) மற்றும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிக்கும் இதேபோன்று குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது. அங்கே வாழ்கின்ற மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கைத்தரத்தை அளிப்பதற்குத் தேவையான அளவிற்கு, ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மேற்கண்ட நான்கு அம்சங்களும் மிகவும் முக்கிய மானவைகளாகும்.

இவற்றைச் செய்திடத் தவறினால், மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக நகரப் பகுதிகளுக்குப் புலம் பெயர்வதைத் தவிர்த்திட முடியாது. அதன் காரணமாக நகரங்களில் புதிது புதிதாக குடிசை பகுதிகள் முளைப்பதையும் தடுத்திட முடியாது, நகர்ப்புறங்களில் ஏழைகள் பெருகுவதையும் தவிர்த்திட முடியாது. அதேபோன்று, இம்மாவட்டங்களில் ஆய்வுகளை மேற் கொள்வதற்கான பொறுப்பை, டாட்டா டிரஸ்ட்ஸ் மற்றும் தி பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாநில அரசாங்கங்களை இதன் மூலம் நிதி ஆயோக் ஓரங்கட்டி இருக்கிறது. இதனை ஏற்க முடியாது. இம்மாவட்டங்களின் மாநில அரசாங்கங்களுக்கு, மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக என்ன பங்களிப்பு என்பதும், அத்திட்டங்களை அமல்படுத்துவதில் அவற்றின் பொறுப்புகள் என்ன என்பதும் இதில் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...