வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரில் பேருந்து நிலையம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ள நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், அரசியல் சாசன உருவாக்கத்திற்கும் அரும்பணியாற்றியவர். இந்திய சமூகத்தில் காலங்காலமாக நீடித்து வரும் மநுதர்ம அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்ட வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமைக்குரியவர்.

இத்தகைய தேசிய தலைவரை ஒரு சாதிய அடையாளமாக கருதி அவரது சிலைகளை உடைப்பது, அவமானப்படுத்துவது தேசத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது.

வேதாரண்யத்தில் இருபிரிவினருக்குள் நடந்துள்ள சில சம்பவங்களின் அடிப்படையில், காவல்நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சில சுயநல சாதிவெறி சக்திகள் உடைப்பதும், சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு காவல்துறை ஒரு சார்புத் தன்மையோடு செயலற்று இருப்பது தொடர்கதையாகி வருவது தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையையும், சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்க உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...