வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.  இவரை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அவர் அமோக வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத்தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இதன் தொடர்ச்சியாகவே வேலூர் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள மோடி தலைமையிலான ஆட்சி மக்கள் விரோத திட்டங்களை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மக்களின் கல்வி உரிமையை பறிக்க திட்டமிடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை, ஒரே மின்சாரம் என மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும், மக்கள் நல திட்டங்களை கெடுக்கவும் மோடி அரசு திட்டமிடுகிறது. மோடி ஆட்சியை தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் முற்றாக நிராகரித்தார்கள். மத்தியில் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,  தமிழகத்தில் குரலை நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கச் செய்வது அவசியம். வேலூர் மக்களவையிலிருந்து திமுக வெற்றி பெற்று செல்வது இதற்கு பெரிதும் உதவும்.

மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி மத்திய பாஜக ஆட்சியின் பினாமி போலவே செயல்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் மாநில ஆட்சியாளர்கள் துணை நிற்கிறார்கள். வேலூர் மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணிக்கு தகுந்தபாடம் புகட்டியாக வேண்டும்.

வேலூர்  திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முழுமையான களப்பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், பி.செல்வசிங், என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி ஆகியோர் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் கட்சியின்  மாநிலத்தலைவர்கள் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் வெற்றிக்கு களப்பணியாற்றுவார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தமிழக விரோதப் போக்கிற்கு பாடம் புகட்டும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...