வேளாண்வணிகத்திற்குப் பணம்விவசாயிகளுக்குமாபெரும் துரோகம்விவசாயிகள்சங்கம் கண்டனம்

புதுதில்லி, மே 16

வேளாண் வணிகத்திற்குப் பணம் ஒதுக்கப்பட்டுள்ள அதே சமயத்தில், விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்து அவர்களுக்குக் கண்ணீரை மட்டுமே மத்திய அரசு காணிக்கையாக்கி இருக்கிறது என்றும், விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நிரந்தரமாக முடக்கி வைத்திட பெரிய அளவில் சதி நடந்துள்ளது என்றும்  அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் விவசாயத்துறைக்கு அளித்துள்ள நிதித்தொகுப்பு என்பது விவசாயிகள் மீதான மற்றுமொரு மாபெரும் துரோகமே தவிர வேறல்ல. நிதித்தொகுப்பானது, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் 7500 ரூபாய் உடனடியாக அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கையையும், விவசாயிகள் தாங்கள் வாங்கியிருக்கிற கடன்களை முழுமையாக ஒருதடவை தள்ளுபடி செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையையும், விவசாய உற்பத்திப் பொருள்களை அதன் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்து கொள்முதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையையும், மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி நிர்ணயம் செய்வதுடன் 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கையையும், சமூக முடக்கம் முடிவடையும் வரையில் அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோன்று, விவசாயிகளுக்குப் பயிர் இழப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் இழப்பீடு செய்யும் விதத்தில் எதுவும் செய்யப்படவில்லை.

1955ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தப்படும் என்றும், இதன் மூலம் விவசாயத்தில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றும் அதன்விளைவாக விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்றும்  நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். மேலும் வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், தான்யங்கள் அனைத்துக்கும் இருந்துவரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தேசியப் பேரிடர் மற்றும் வறட்சிக் காலங்கள் தவிர மற்ற காலங்களில் அறவே நீக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இவை எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு உதவப் போவதில்லை. மாறாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சந்தையில் சாமானிய மக்களுக்கு எட்டாத  வகையில் அதீத விலைக்கு விற்பனையாகும். இதன்விளைவாக நாட்டின் உணவுப் பாதுகாப்பும்கூட சமரசத்திற்குள்ளாகும்.

மாநிலங்களுக்கிடையே விவசாயப் பொருள்கள் வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், விவசாய வணிகத்திற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இவற்றால் பயனடைபவர்கள் நிச்சயமாக விவசாயிகளோ, விவசாயத் தொழிலாளர்களோ இல்லை என்பதும் மாறாக வேளாண் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு நிறுவனங்களுமே என்பதும் தெள்ளத் தெளிவாகும். இதன் காரணமாக இப்போது இருந்துவரும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் (Agricuture Produce Market Committees) ஓரங்கட்டப்படும். மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களும் அரிக்கப்படும். விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வேளாண் வணிக நிறுவனங்களின் தயவில் இருக்க வேண்டி வரும். ஏனெனில் அதன்பின்னர் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மீது விலை நிர்ணயம் செய்வதற்கோ அல்லது பயிர்களின் விலைகளை உறுதிப்படுத்துவதற்கோ விவசாயிகளுக்கு அதிகாரம் எதுவும் கிடையாது.

நிதியமைச்சரின் நிதித்தொகுப்பானது தற்போது பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும்  விவசாயத் தொழிலாளர்கள் மீதான மூர்க்கத்தனமான நவீன தாராளமயத் தாக்குதலாகும். வேளாண் உற்பத்தி, கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகும். சமூக முடக்கத்தின் காரணமாகப் வேளாண் உற்பத்தியில் இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய மோசமான நிலையில் இப்போது அவர்கள் இருந்து வருகிறார்கள். காரணம் அவர்களால் காலத்தே அறுவடை செய்யமுடியவில்லை, அறுவடை செய்த பொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இவை குறித்தெல்லாம் நிதியமைச்சரின் நிதித்தொகுப்பு மவுனம் கடைப் பிடித்துள்ளது.   

இவ்வாறு வேளாண் வணிக ஆதரவான மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய நிதியமைச்சரின் நிதித் தொகுப்பை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் முழங்கிடுமாறு நாட்டிலுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு அசோக் தாவ்லே, ஹன்னன்முல்லா அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...