நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

கர்நாடக அரசே! காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே!

நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

கர்நாடக மாநில அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவதுடன் குடிதண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்படும். இம்முடிவை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கர்நாடக அரசை வலியுறத்துகிறது. மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு கர்நாடக மாநில அரசின் அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைப்பதில் மத்திய அரசு கால தாமதம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகாமல் தடுக்க வேண்டுமானால் கர்நாடக மநில அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசை நேரடியாக வற்புறுத்த வேண்டும்.

மேற்கண்ட பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை தலையிட வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நவம்பர் 29-ஆம் தேதி ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் விவசாய சங்கங்களின் இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தை வெற்றியடையச் செய்யும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழுமையாக பங்கேற்க வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் ஆதரவளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...