‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்து மே 22 ஆம் தேதி மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். அப்போது அங்கு காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பின்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூட உத்தரவிட்டது.

பின்னர் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அப்பீல் எண் 87-2018-ல் 20-08-2018 மற்றும் 30-08-2018 தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க அமைக்கப் பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் குழு முன்பாக, மேற்படி குழு அமைக்கப்பட்டதின் நோக்கத்தினை வழக்கின் 5-வது எதிர்மனுதாரரான சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சமர்ப்பித்தது தொடர்பான புத்தகம் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டகுழு அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.‘

பின்னர் கே.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் எதிர் மனுதாரர்களாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட வர்களோடு 5வது மனுதாரராக சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை ஏன் திறக்கக்கூடாது என்பது குறித்து தருண் அகர்வாலிடம் கே.எஸ்.அர்ச்சுனன் விசாரணையின் போது விளக்கியுள்ளார்.

தொழிற்சாலைகளை மூன்று பிரிவு களாக பிரிப்பது வழக்கம், அதில் வெள்ளை என்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிறுவனமாகும். சிவப்பு என்றால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலை எனகருதப்படும். அவை மாசு விளைவிக்கும் அளவினை வைத்து பிரிக்கப்படும். ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனம் இந்த பிரிவில் உள்ள அதிகபட்ச நிலையையும் தாண்டி அமைந்துள்ளது. சராசரியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு சுமார் 12 லட்சம் டன் காப்பர் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த பத்து வருடங்களில் சுமார் 1 கோடி 17 லட்சம் டன் காப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.‘

தாமிரத்தை பிரித்தெடுக்கும்போது அதில் இருந்து வெளி வரும் தூசி யானது 10 மைக்ரான் அளவை விட குறைவான அளவில் இருக்கும். இதனை மக்கள் சுவாசிக்கும்போது அவர்களது நுரையீரலில் சென்று நோய் ஏற்படும் அபாயம் நேரிடும். தாமிரத்தில் பல்வேறுவகையான உலோகங்கள் உள்ளன. அவற்றினை உருக்கும்போது இது வரை அவர்கள் கூறிய குறைந்தபட்ச அளவு கணக்கின் படி சுமார் 80 ஆயிரம் டன் ஆர்சனிக் அமிலம் வெளியேற்றப் பட்டிருக்க வேண்டும். அவை காற்றில் கலந்திருக்க வேண்டும் அல்லது புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆர்சனிக், சார்மியம், குரோமியம் போன்ற உலோகங்கள் மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கா னவை என அரசாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் பிரித்தெடுக்காமல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உயர் ரக அமிலங்களை மட்டும் பிரித்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

காப்பரில் இருந்து வரும் நச்சு கழிவுகளை என்ன செய்தார்கள்? அவர்கள் ரோடு போட பயன்படுத்திய தாக குறிப்பிட்டுள்ளனர். சிமெண்ட் ஆலைக்கு அவற்றை அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்த சிமெண்ட் ஆலை என்பதை இதுவரை குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இந்த ஆலை மூடுவது உட்பட முடிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுப்பின் அவற்றிற்கு குறுக்கே நீதிமன்றம் நிற்காது என தெரிவித்துள்ளது. எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என கூறியுள்ளோம் என கூறினார்.

பேட்டியின்போது சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர செயலாளர் தா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ரா.பேச்சிமுத்து, கே.பி.ஆறுமுகம், ராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புவிராஜ், எம்.எஸ்.முத்து, பூமயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...