ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிப்பது தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிற அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வணக்கம்.

 1. கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டு கடந்த ஆண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதும், தற்போது கோவிட் தொற்று 2வது அலையால் மிகப்பெருமளவிற்கு தமிழகத்தில் தொற்றுக்கு ஆளாகி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இப்போது வரை 10.81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதும், 13,557 பேர் உயிரிழந்துள்ளதும் கவலையளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இக்காலத்தில் நோய்த் தொற்று குறித்து அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களும், சுகாதார செயலாளர் அவர்களுக்கும் விளக்கியுள்ளார்கள். நோய்த் தொற்று காலத்தில் இரவு – பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் அவர்களது நீண்ட கால கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
 2. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும், மருத்துவ சிகிச்சையை தீவிரப்படுத்தவும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென பல முறை எதிர்கட்சிகளின் சார்பில் வற்புறுத்திய போதும், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முன்வரவில்லை. தற்போது நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டமும், கோவிட் 2வது அலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி விவாதிப்பதற்காகவும் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 3. மேலும் இன்று நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் குறைந்தபட்சம் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சி தலைவர்களையும் அழைத்து இப்பிரச்சனை குறித்து விரிவான விவாதத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையும் அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.
 4. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்களை கேட்டுள்ள நிலையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் நோக்கங்களை புறவழியாக நிறைவேற்றும் உள்நோக்கம் இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. மேலும், மனித உயிர்களின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கருதக்கூடாது என்பதோடு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் உள்நோக்கத்தை நிறைவேற்றுகிற எத்தகைய முயற்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிஞ்சிற்றும் உடன்படாது என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
 5. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வற்புறுத்தி அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ள கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள் என்பதும் அறிந்ததே. அத்தகைய கொடுமைகளை எதிர்த்தும், அந்த கொடூரமான தாக்குதலை நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கடைசி வரை நீதிமன்றம் சென்று வாதாடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை அனைவரும் அறிந்ததே. நீண்ட நெடுங்காலமாகவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய இயக்கங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறோம். தமிழக அரசும் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான வழக்குகளை நடத்தி வந்துள்ளதும் அறிந்ததே.
 6. இந்த பின்னணியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் செயல்பட அனுமதிக்கக் கூடாது, அந்த ஆலையை முழுமையாக பிரித்து அழித்திட வேண்டுமென்ற தூத்துக்குடி மக்களுடைய உணர்வுகளோடு, தமிழக மக்களும் இணைந்து நிற்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள மனுவானது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினால் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கிற ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தின் மூலம் அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கும், அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து புறவழியாக இயக்குவதற்குமான உள்நோக்கத்தோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
 7. கொரோனா தொற்றினால் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் பற்றாக்குறையின் காரணமாக நோய்த் தொற்றும், மரண விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. இதற்கான முழுப்பொறுப்பினை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போது ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனையளிக்கிறது. மே மாதத்தில் நோய்த் தொற்று பல மடங்கு அதிகரித்து ஆக்சிஜன் தேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இருக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் சமச்சீராக விநியோகப்பதற்குமான ஏற்பாடுகளையும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து பேசி முழுக்கவனத்தோடு மேற்கொள்ள வேண்டும். அதேபோல, தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்கு தடுப்பூசி தயாரிப்பில் முழுமையான அனுபவமும், தகுதியும் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்புக்கான உத்தரவுகளையும், நிதி உதவிகளையும் மேற்கொண்டிருந்தால் தடுப்பூசி பற்றாக்குறையிலிருந்து இந்திய நாட்டு மக்களை பாதுகாத்திருக்க முடியும். இதற்கு மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான உத்தரவையும், நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கி இந்திய நாட்டு மக்களை பெரும் பொருளாதார சுமைக்கு தள்ளியுள்ளது.
 8. இந்நிலையில் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் ஆலையை தமிழக அரசு இயக்கி உற்பத்தியை பெருக்க முன்வருமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளவுள்ள நிலையினை தெளிவுப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

ஆக்சிஜன் தேவையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நிலையை கவனத்தில் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உள்ள அனைத்து வாய்ப்புகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதையும் மீறி ஆக்சிஜன் தேவையை ஈடுசெய்ய ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டுமெனில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு மேற்கொள்ளலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

 • ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
 • அந்த ஆலையில் தாமிரம் உருக்கு உள்ளிட்ட எந்த உற்பத்தியையும் மேற்கொள்ளக் கூடாது. எக்காரணம் கொண்டு இங்கே தாமிரம் உற்பத்திக்கு அனுமதிக் கூடாது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் பயன்படுத்திட வேண்டும்.
 • ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம். இதை தவிர்த்து மாற்று வழிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முன்வரக் கூடாது.
 • அரசு இந்த ஆலையை இயக்குவது என்கிற முடிவினை மேற்கொள்கிறபோது தூத்துக்குடி மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மக்களது ஒத்துழைப்பின்றி அரசு ஆலையை செயல்படுத்த முனைவது மீண்டும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
 • ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம், சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனம்,  நீலகிரியில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம், இமாச்சலப்பிரதேசம் காசோலியில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென தமிழக அரசின் சார்பில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாண்புமிகு. முதல்வர் பூரண குணமடைய வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...