ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி வலியுறுத்தல்

கடந்த 23 ஆம் தேதி வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு வெளியேற்றப்பட்டதால் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மீனவ சங்கங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்படி ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. 

ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியமை மற்றும் மக்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருந்தது. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தூத்துக்குடி மாவட்டக்குழு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வாதாடியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் நலனைப் பற்றியோ சுற்றுச் சூழலைப் பற்றியோ எவ்வித அக்கறையுமின்றி செயல்படுவதை நிரூபிக்கும் வண்ணம் மேலும் ஒரு சம்பவமாக இது இருக்கிறது. 

எனவே, தமிழக அரசாங்கம் தூத்துக்குடி மக்களின் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிலம், நீர், காற்று ஆகியவற்றின் பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஒரு பேரழிவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தாத வண்ணம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply